சீமராஜா, நல்ல அனுபவத்தைத் தரும் – பொன்ராம்

தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்’ என திருப்புமுனையான இரண்டு பெரிய வெற்றிகளைக் கொடுத்தவர் இயக்குனர் பொன்ராம்.

மூன்றாவது முறையாக மீண்டும் ‘சீமராஜா’ படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுடன் இணைந்த ஹாட்ரிக் வெற்றிக்காகக் காத்திருக்கிறார்.

“ஒரு மாணவர் பரீட்சை முடிவுக்கு காத்திருப்பதை போலவே நானும் காத்திருக்கிறேன். முழு படக்குழுவும் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தாலும், எனக்கு வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும் உணர்வு இருக்கிறது,” என்கிறார்.

“சீமராஜா மூலம் எங்கள் முந்தைய படங்களில் இருந்து நாங்கள் சிறிது சிறிதாக மேம்பட்டிருக்கிறோம். அதற்காக எங்கள் வழக்கமான பொழுதுபோக்கு விஷயங்களை ஒதுக்கி விடவில்லை. பொழுதுபோக்கு தான் பின்னணியாக இருக்கும், ஆனால் சில மாற்றங்களை கொண்டிருக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, சிவகார்த்திகேயன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது.

படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பே சமந்தா தனது கதாபாத்திரத்திற்காக, முழு முயற்சியில் ஈடுபட்டார். அவர் சிலம்பம் பயிற்சி பெற்று, கேமராவின் முன்பு அதை நேர்த்தியாக செய்து காட்டினார். சூரி நிச்சயமாக எங்கள் குழுவில் மிகப்பெரிய பலம். உங்களை விலா நோக சிரிக்க வைப்பார்.

அனைவரும் சீமராஜா ஒரு திருவிழா உணர்வைத் தருவதாகச் சொல்வதை கேட்பதில் மகிழ்ச்சி. அதற்கு முக்கியமான காரணம் தொழில்நுட்பக் கலைஞர்களாக பணிபுரிந்த நண்பர்கள்தான் என்று நான் கூறுவேன்.

ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், கலை இயக்குனர் முத்துராஜ் மற்றும் இசையமைப்பாளர் டி இமான் இல்லாமல் இது நடந்திருக்காது. சீமராஜா திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்கிறார்.

24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிப்பில், பொன்ராம் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன், லால் மற்றும் பலர் நடிக்கும் படம் சீமராஜா.

வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை மறுநாள் செப்டம்பர் 13ம் தேதி இப்படம் வெளியாகிறது.

Read Previous

சீமராஜா, கவனமாகத் தேர்வு செய்த ஆடைகள் – அனு பார்த்தசாரதி

Read Next

அறிமுக இயக்குனர் படத்தில் ஜோதிகா