வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஆன்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, கிஷோர், அமீர் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் ‘வடசென்னை’.
இப்படத்தைப் பார்த்த திரையுலகினர் பலரும் பாராட்டி வருகிறார்கள். படமும் வசூல் ரீதியாக நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.
‘வடசென்னை’ படத்தை பிரபல இந்திப்பட இயக்குனரும், ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் வில்லனுமான அனுராக் காஷ்யப் பார்த்து பலமாகப் பாராட்டியிருக்கிறார்.
வித்தியாசமான தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்து அவர் பாராட்டுவது வழக்கம். ‘வடசென்னை’ படத்தை கொஞ்சம் கூடுதலாகவே டிவிட்டரில் பாராட்டித் தள்ளியிருக்கிறார்.
“நான் இதுவரை பார்த்த கேங்ஸ்டர் படங்களில் ஒரிஜனல் கேங்ஸ்டர் படம் ‘வடசென்னை’. வெற்றிமாறன் தொடர்ச்சியாக அற்புதமான படங்களைத் தருகிறார். ஆன்ட்ரியா, சமுத்திரக்கனி, தனுஷ் மற்றும் செந்தில், ராஜன், பத்மா கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா தம்பி கண்ணன் கதாபாத்திரத்தில் நடிப்பவர், அவருடைய அப்பாவை எதிர்க்கும் காட்சியைப் பற்றி அதிகமாகப் பேச வேண்டும்,” என அனுராக் கூறியிருக்கிறார்.
ஆனால், அவருக்கு செந்தில், ராஜன், பத்மா கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் யார் எனத் தெரியவில்லை. ஒரு ரசிகர் ராஜன் ஆக நடித்திருப்பது இயக்குனர் அமீர் என சொல்ல, ‘அமீர் சுல்தானா அது’ என ஆச்சரியத்துடன் கேட்டிருக்கிறார் அனுராக் காஷ்யப்.