வெளியில் இருந்த நான் உள்ளே – யோகி பாபு

4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, கனடா மாடல் எலிஸா நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் கூர்கா.

ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கும் படத்தை லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டு, வாழ்த்தி பேசினார்.

நிகழ்சசியில் பேசிய இயக்குனர் சாம் ஆண்டன்,

“ஒரு ஜாலியான படம் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் உருவான படம்தான் ‘கூர்கா’. 34 நாட்களில் படத்தை முடிக்க வேண்டும், நாங்களே தயாரிக்கிறோம் என்ற போது நிறைய சிரமங்கள் இருந்தது. யோகிபாபு யாருக்கும் கொடுக்காத முக்கியத்துவத்தை எங்களுக்கு கொடுத்திருக்கிறார். ஒரே கட்டமாக மொத்தமாக தேதிகளைக் கொடுத்தார். ரொம்ப பிஸியாக இருந்தாலும், தனக்கென ஓய்வுக்கு நேரம் ஒதுக்காமல் எல்லா படங்களுக்கும் தேதிகளைக் கொடுத்து, அவர் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார்,” என்றார் இயக்குனர் சாம் ஆண்டன்.

“எனக்கும், சாம் ஆண்டனுக்கும் நட்பு உருவானதே ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தில் இருந்துதான். எனக்கு மிகவும் சுதந்திரம் கொடுத்த ஒரு இயக்குனர். அதுதான் அடுத்தடுத்து அவர் இயக்கத்தில் தொடர்ந்து என்னை நடிக்க வைக்கிறது. சத்யம் தியேட்டர் வெளியில் இருந்த நான் இந்த இடத்தில், மேடையில் இருக்கிறேன், அதற்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி,” என்றார் நடிகர் யோகி பாபு.

“எனக்கு பாடல் பாடுவது மட்டுமே தெரியும். மற்ற விஷயங்களைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. ஆனாலும், சினிமா துறையில் எவ்வளவோ பேர் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். ஒரு படம் வெற்றியடைந்தால்தான் அனைவருக்கும் வாழ்க்கை. இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். தண்ணீரை யாரும் வீணாக்க வேண்டாம், தண்ணீர் என்பது தங்கம், பிளாட்டினத்தை விட விலை மதிப்புடையது. தண்ணீர் சேமிப்பு என்பது மிக முக்கியம். அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டு செல்வது அது ஒன்றே,” என்றார் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம்.

‘கூர்கா’ ஜுன் 28ம் தேதி வெளியாக உள்ளது.

Read Previous

அமலா பால் நடிக்கும் ‘ஆடை’ டீசர்

Read Next

ஜெயம் ரவி நடிக்கும் 25வது படம் ஆரம்பம்