பக்ரீத் – ஒட்டகத்தை வைத்து தமிழில் முதல் சினிமா

எம் 10 புரொடக்ஷன் தயாரிப்பில், ஜெகதீசன் சுபு இயக்கத்தில், இமான் இசையமைப்பில், விக்ராந்த், வசுந்தரா மற்றும் பலர் நடிக்கும் படம் பக்ரீத். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு.

பத்திரிகையாளர் சந்திப்பில், தயாரிப்பாளர் முருகராஜ், இயக்குனர் ஜெகதீசன் சுபு, நாயகன் விக்ராந்த், நாயகி வசுந்தரா, நடிகர் ரோகிப் பதாக், மோக்லி, பேபி ஸ்ரூத்தீகா, பாடலாசிரியர்கள் ஞானகரவேல், மணிஅமுதவன், கலை இயக்குனர் மதன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

விக்ராந்த் பேசும்போது, ‘நான் சினிமா உலகிற்கு வந்து 11 வருடம் ஆகுது. ஆனால் இந்த மேடை எனக்கு ரொம்ப புதுசு. இப்போது பெரிய நம்பிக்கையோடு நிற்கிறேன். இந்தப் படம் அந்த தைரியத்தைக் கொடுத்திருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் போல இதுவரை வந்ததில்லை, இனியும் வராது.

இயக்குநர் ஜெகதீசன் அவர்களோடு மீண்டும் வேலை பண்ணவேண்டும். தயாரிப்பாளர் முருகராஜ் அண்ணன் தான் இந்தப்படத்தை பெரிதாக கொண்டு வர வேண்டும் என்றார். இமான் சார், எடிட்டிர் ரூபன் போன்றவர்கள் இந்தப் படத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலை செய்தார்கள்.

முருகராஜ் அண்ணனை எனக்கு 13 வருடங்களாகத் தெரியும். நிறைய நொந்துவிட்டார். ஆனால் இந்தக் கதை மீது அவருக்கு பெரிய நம்பிக்கை. இந்தப் படத்தில் வரும் ஒட்டகத்தை கொண்டுவருவதற்கு அவ்வளவு சிரமப்பட்டார். ஒட்டகம் மீது நிறைய பஞ்சாயத்து இருக்கு. அந்த ஒட்டகத்துக்காக அனுமதி வாங்கிக் கொண்டுவர 8 மாதங்கள் ஆகியது.

ஒட்டகத்தை தத்தெடுத்து பயிற்சி கொடுத்து, அதனுடன் நாங்கள் பழக ஒரு மாதம் ஆகியது. மேலும் அந்த ஒட்டகத்தை 100 நாளில் ஒப்படைக்க வேண்டும் என்ற டெட்லைன் வேறு இருந்தது. ராஜஸ்தான், மத்திய பிரதேஷ் ஆகிய இடங்களுக்கு ஒட்டகத்தை அழைத்துச் சென்று படப்பிடிப்பு நடத்தினோம். வானிலை, மழை என பல பஞ்சாயத்து இருந்தது.

உண்மையிலேயே தயாரிப்பாளருக்கும் ஒட்டகத்திற்கும் தான் பெரிய நன்றி சொல்லணும். இப்படத்தில் ஒரு கிராபிக்ஸ் காட்சி கூட இல்லை. படத்தைப் பார்த்த அனைவருமே பெரிதாகப் பாராட்டி இருக்கிறார்கள். நிச்சயம் இந்த நல்ல படத்தை பத்திரிகையாளர்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன்,’’ என்றார்.

Read Previous

தமிழ் சினிமா – ஜுன் 28, 2019 வெளியான படங்கள்

Read Next

ஹாலிவுட்டில் ஹீரோவாக நடிக்க வேண்டும் – நெப்போலியன்