சமூக சமநிலையை பாதிக்கும் நீட் தேர்வு – சூர்யா

நடிகர் சிவகுமார், அவரது அறக்கட்டளை மூலம் கடந்த 40 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு, கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார்.

மாணவர்களை ஊக்கப்படுத்த தமது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார். கடந்த 40 ஆண்டுகளாக தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார்.

இந்த ஆண்டுக்கான, சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 40-ஆம் ஆண்டு நிகழ்வு, சென்னையில் நடைபெற்றது. விழாவில் 20 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ. 2,00,000/- (ரூபாய் இரண்டு லட்சம்) பரிசளிக்கப்பட்டது.

இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும் ஏழை மாணவர்களுக்கான தாய் தமிழ்ப் பள்ளிக்கு 1 லட்சமும், முதல் தலைமுறையாக படிக்கும் ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும், வாழை அமைப்பிற்கு 1 லட்சம் வழங்கப்பட்டது.

மேலும், வேலூர் மாவட்டம் திருப்புக்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை, முன் மாதிரி பள்ளியாக செயல்பட தொடர்ந்து பணியாற்றி வரும் ஆசிரியர் செல்வகுமார் மற்றும் அகரம் அறக்கட்டளையின் ‘நமது பள்ளி’ திட்டத்தின் திறன்மிகு வழிநடத்துதலுக்காக, அகரமுடன் இணைந்து செயலாற்றிவரும் மறைமலை நகர் அரசு மேல்நிலை பள்ளி, கருங்குழி அரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அவர்களது தன்னலமில்லாத சமூகப் பங்களிப்பிற்காக விழா மேடையில் கௌரவிக்கபட்டனர்.

நிகழ்ச்சியில் கார்த்தி அனைவரையும் வரவேற்றார். பின்னர் மாணவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பரிசு பெற்ற மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார்,

“1979-ஆம் ஆண்டு, மே மாதம் தொடங்கப்பட்ட ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’ தொடர்ந்து, ப்ளஸ்-டூ தேர்வில் சிறந்த உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. 30 ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை, அதற்குப் பிறகு அகரம் பவுண்டேஷன் பொறுப்பேற்று சிறப்பாக கல்விப் பணி செய்து வருகிறது.

சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை, என்னுடைய பிள்ளைகள் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள். கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

கல்வி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு உயர்த்தும் என்பதையும் நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என்னைப் போல ஏழைக் குடும்பத்தில் பிறந்து நன்றாக படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது. இன்னும் போகவேண்டிய பயணம் வெகுதூரம் உள்ளது.

மாணவர்கள் தங்களது கவனம் சிதறாமல் தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்,” என்றார்.

அகரம் பவுண்டேஷன் நிறுவனர் நடிகர் சூர்யா பேசுகையில்,

“ஒரு காரியத்தை துவங்குவது பெரிய விஷயம் இல்லை. தொடங்கிய காரியத்தை தொடர்ந்து நடத்துவது தான் பெரிய விஷயம். அப்பாவிடம், நாங்கள் கற்றுக் கொண்ட முக்கியமான பாடம் அது. ஆரம்பிக்கும் முன்பு ஆயிரம் முறை யோசிப்பார். ஆரம்பித்து விட்டால், அந்த காரியம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று பாடுபடுவார்.

40 வருடங்களாக நடக்கும் இந்த நிகழ்வு இதற்கு ஒரு உதாரணம். இங்கே பரிசு பெற்ற மாணவர்கள் எல்லோரும் சிறப்பான முறையில் கல்வி கற்றவர்கள். அதை சிறப்பு செய்யும் நிகழ்வு தான் இது. அகரம் பவுண்டேஷன் நம் சமூகத்தில் இருக்கும் அடித்தட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த பணிகளைச் செய்து வருகிறது. இந்த ஆண்டோடு அகரம் அறக்கட்டளை மூலம் உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 3000 பேராக உயர்கிறது.

தனிப்பட்ட முறையில் எனக்கு சாத்தியம் இல்லை. தகுதியுள்ள ஏழை மாணவர்களின் கல்லூரி கனவை, பல நல்ல உள்ளம் கொண்டவர்களின் உதவியோடு நனவாக்கி இருக்கிறோம். தமிழகத்தின் தரம் வாய்ந்த முக்கியமான கல்வி நிறுவனங்கள், அகரம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் இலவசமாக படிக்க வாய்ப்பு தருகின்றன . தரமான கல்வி ஏழை மாணவர்களுக்கு கிடைக்க கரம் கோர்த்து உதவும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

புதிய கல்வி கொள்கை பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் பலரும் உள்ளனர். கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இந்த கல்விக் கொள்கை பற்றி சரியான வெளிச்சம் போய் சேரவில்லை.

புதிய கல்வி கொள்கை இந்தியா முழுவதும் உள்ள 30 கோடி மாணவர்களின் கல்வியையும், எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் விஷயம். இதுகுறித்து யாரும் பேசவில்லை என்ற வருத்தம் உள்ளது. எல்லோருடைய அச்சம், கோபம் என்னவென்றால் தகுதித் தேர்வு, நுழைவு தேர்வு போன்றவற்றில் இருக்கிற கவனம் தரமான சமமான கல்வியை கொடுப்பதில் இல்லை.

தரமான கல்வியை கொடுக்காமல் எப்படி தகுதியான மாணவர்களை எதிர்பார்க்க முடியும் ?. நுழைவுத் தேர்வுகளில் கவனம் செலுத்துகிறீர்கள். அடித்தளத்தில் இருக்கும் மாணவர்களின் கல்வி தரத்தில் ஏன் கவனம் செலுத்தவில்லை ?. ஓராசிரியர்கள் பள்ளிகளை மூடி விட்டு ஒருங்கிணைந்த பள்ளிகள் ஆரம்பிக்கப் போவதாகச் சொல்கிறார்கள். பஸ் வசதி இல்லாத கிராமத்து மாணவர்கள் எங்கு செல்வார்கள் ?. வசதி குறைவுகளை சரி செய்யாமல், பள்ளிகளை மூடுவது சரியல்ல. 1,848 பள்ளிகள் மூடப்படும் என்ற நிலை உள்ளது.

60 சதவீதம் மாணவர்கள் அரசு பள்ளியில் படிப்பவர்கள். கிராமங்களில் இருந்துதான் வருகிறார்கள். 3 வயதிலேயே 3 மொழிகள் திணிக்கப்படுகிறது. எனது குழந்தைகளுக்கு 3-வது மொழி சொல்லி கொடுப்பது சவாலாக உள்ளது. இப்படி செய்தால் மாணவர்கள் எப்படி படிப்பார்கள். எல்லோரும் அமைதியாக இருந்தால், இது திணிக்கப்படும். 3, 5, 8-வது வகுப்புகளில் பொதுதேர்வுகள் நடத்துவது சரியா ?. தேர்வை சரியாக எழுதாவிட்டால் வெட்கப்பட்டு படிப்பையே பலர் நிறுத்தி விடுகின்றனர்.

வளர்ந்த நாடுகளில் 8-வது வகுப்புவரை தேர்வுகள் இல்லை. 95 சதவீதம் என்று ஆரம்பப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 11, 12-வது வகுப்புகளுக்கு வரும் போது வெறும் 55 சதவீதமாக மாறிவிடுகின்றது. 6.5 கோடி மாணவர்கள் பள்ளிக்கு செல்வது இல்லை. 40 சதவீதம் பேர் படிப்பை நிறுத்தி விடுகின்றனர். 30 சதவீதம் மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் படிக்கின்றனர். அவர்களை எப்படி நீட் எழுத சொல்வீர்கள். நீட் தேர்வு சமூக சம நிலையை பாதிக்கிறது. கற்பித்தல் இல்லாமல் பயிற்சி மையங்களாக மாறப்போகிறது.

பயிற்சி மையங்கள் வருமானம் ரூ.5 ஆயிரம் கோடி என்கின்றனர். 8-வது வகுப்பில் இருந்தே பயிற்சி மையங்கள் தேவைப்படுகிறது. இவ்வளவு நுழைவுத் தேர்வு இருந்தால் கிராமப்புற மாணவர்கள் எப்படி படிப்பார்கள் ?. பயிற்சி மையங்கள் காளான்கள் போல் வளரப் போகிறது. நகர்புற மாணவர்கள் மீதுதான் அக்கறை செலுத்துகின்றனர்.

50 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன. அவற்றை 12 ஆயிரம் கல்லூரிகளாக மாற்றப்போகிறார்கள். மறுபடியும் கிராமப்புற கல்லூரிகள் மூடப்படும். அங்குள்ள மாணவர்கள் எப்படி படிப்பார்கள் ?. கல்வி கொள்கை சம்பந்தமான கருத்துக்களை சொல்ல ஜூலை 30-ந்தேதி கடைசி தேதி என்கிறார்கள். புதிய கல்வி கொள்கைக்கு எதிராக குரல் கொடுக்கவும், அவற்றில் மாற்றங்கள் செய்யவும் சமூக அமைப்புகள் வற்புறுத்த வேண்டும்,” என்றார் சூர்யா.

Read Previous

தமிழ் சினிமா – ஜுலை 12 வெளியான படங்கள்…

Read Next

வெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்