ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் முதன்மைக் கதாநாயகியாக தமன்னா நடிக்கும் படம் ‘பெட்ரோமாக்ஸ்’.
பல வெற்றித் திரைப்படங்களை உலகெங்கும் விநியோகம் செய்த ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் நிறுவனம், இப்படத்தின் மூலம் முதல் முறையாக திரைப்படத் தயாரிப்பில் தடம் பதிக்கிறது. இப்படத்தை இயக்கும் ரோகின் வெங்கடேசன் ‘அதே கண்கள்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.
ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் தனது முதல் தயாரிப்பிலேயே பெண்களை முன்னிலைப்படுத்தும் ஒரு ஆழமான கதையை திகில் மற்றும் நகைச்சுவை கலந்து ஒரு ஜனரஞ்சகமான படமாக படைக்க இருக்கிறது.
நயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும் நோக்கில், பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்ற, பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார். அந்த வரிசையில் முதல் படமாக இப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தில் யோகி பாபு, முனீஸ் காந்த், சத்தியன், காளி வெங்கட், மற்றும் சின்னத்திரை புகழ் டிஎஸ்கே, பிரேம், ஸ்ரீஜா, கே எஸ் ஜி வெங்கடேஷ், பேபி மோனிகா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை நிச்சயம் இருக்கும். அதைத் தீர்க்கும் நோக்கில் ஒவ்வொருவராக இணைந்து, இறுதியில் ஒரு பலமான கூட்டணியாகச் சேர்ந்து, தங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அந்த பிரச்சனை தீர்ந்ததா, அந்த பிரச்சனைகளுக்கு காரணம் யார், அவர்கள் அதை எப்படி வெற்றி கொண்டார்கள் என்பதை நகைச்சுவையும் திகிலும் கலந்து ஜனரஞ்சகமாக படமாக்கி வருகிறார் இயக்குனர் ரோகின்.
டேனி ரேமண்ட் ஒளிப்பதிவில், லியோ ஜான் பால் படத்தொகுப்பில், வினோத் ராஜ்குமார் கலை இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைக்கிறார். ஜிஆர் சுரேந்தர்நாத் வசனம் எழுத, ஹரி தினேஷ் சண்டை பயிற்சி அமைக்கிறார்.
இப்படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியிடப்பட்டது.