நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில், இமான் இசையைமப்பில் சசிகுமார், பாரதிராஜா, மீனாட்சி மற்றும் பலர் நடிக்கும் ‘கென்னடி கிளப்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சசிகுமார் பேசுகையில்,
‘கென்னடி கிளப்’ படத்தின் நாயகன் நான் இல்லை, இப்படத்தில் நடித்திருக்கும் நிஜ கபடி வீராங்கனைகள் தான். கபடி பயிற்சியாளர் செல்வமாக தான் நான் நடித்திருக்கிறேன்.
நல்லுச்சாமியாக பாரதிராஜா சார் நடித்திருக்கிறார். கபடியில் வென்றால் தான் வேலைவாய்ப்பு, வாழ்க்கை எல்லாமே அமையும் என்று தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பல போட்டிகளில் வென்றிருக்கிறார்கள்.
இப்படத்தின் கதையை சுசீந்திரன் கூறும்போது பெண்களுக்காக இப்படத்தை நிச்சயம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இம்மாதிரி படங்களில் நான் நிறைய நடிப்பேன். பாரதிராஜாவுடன் நடிக்கும்போது சுறுசுறுப்பாக இருக்கும். அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். அவரை சுசீந்திரன் அழகாகக் கையாண்டார்.
எல்லோருடனும் இணைந்து நடித்தது இயல்பாக, சுலபமான அனுபவமாக இருந்தது. டி.இமானின் இப்படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
இப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்க முடிவு செய்திருக்கிறோம்,” என்றார்.
இயக்குநர் பாரதிராஜா பேசும்போது,
நல்ல கலைஞர்களை வளர்கின்ற கலைஞர்களை ஊக்கப்படுத்தவில்லை என்றால் நான் ஒரு நல்ல கலைஞன் இல்லை. இதற்கு முன்பு சுசீந்திரனுடன் ஒரு படத்தில் நடித்தேன். ஆனால், இப்படத்தில் ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். இப்படத்தில் நடித்த அனுபவமே இல்லை.
சினிமா என்றால் என்னவென்றே தெரியாத கபடி வீராங்கனைகள் இப்படத்தில் நடித்ததாகவே தெரியவில்லை, வாழ்ந்திருக்கிறார்கள். அர்ப்பணிப்போடு நடித்திருந்த இந்த பெண்களுக்கு நன்றி கூற வேண்டும்.
சுசீந்திரன் மாதிரி ஒரு மகனைப் பெற்றதற்கு நல்லுச்சாமி கொடுத்து வைத்தவர். அம்பானி போல் வசதியாக வாழ விருப்பமில்லை. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இயக்குநர் பாரதிராஜாவாகவே பிறக்க விரும்புகிறேன்.
இது சினிமா அல்ல, தென் மண்ணின் வாழ்க்கை. அதில் பெரும் பங்கு நல்லுச்சாமிக்கு இருக்கிறது. இப்படத்தில் நல்லுச்சாமியாகத்தான் நான் நடித்திருக்கிறேன்.
சசிகுமாரை பார்க்கும்போது அவர் முகத்தில் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். சிறு குழந்தைகளுக்கும் அவருடைய முகம் பிடிக்கும். அவருடன் நெருங்கி பழகும்போதுதான் அவர் இன்னும் குழந்தையாக இருக்கிறார் என்று தெரிகிறது.
இப்படத்தை தொழிற்சார்ந்த படமாக இல்லாத வண்ணம் சிறப்பாக இயக்கியிருக்கிறார் சுசீந்திரன்.
நானும் டி.இமானும் ஒரு படத்திற்கு இணைந்து பணியாற்றுவதாக இருந்தது. ஆனால், அப்படம் நின்று விட்டது. அவர் உடம்பைக் குறைத்து திறமையை வளர்த்துக் கொண்டார். படத்தொகுப்பாளர் ஆண்டனியின் பல படங்கள் பார்த்திருக்கிறேன். மிகவும் திறமையானவர்.
லெனின் பேசும்போது, நான் அதிகம் பேசவில்லை பேசினால் பிரச்னை வரும் என்று கூறினார். பேசினால் பிரச்னை தீரும், ஆகையால் பேச வேண்டும். நான் துணை நிற்கிறேன், தயங்காமல் பேசு லெனின்,” என்றார்.
நிகழ்ச்சியின் இறுதியில் இயக்குநர் பாரதிராஜா கபடி வீராங்களைகளுக்கு பதக்கங்களை வழங்கினார்.