கதை
மிகவும் கண்டிப்பான அப்பா சமுத்திரக்கனி. ஆனால், மூத்த மகன் கிருபாகரன் மீதுதான் அவருடைய அனைத்து கண்டிப்பும். இளைய மகனுக்கு அவ்வளவு செல்லம் கொடுக்கிறார். கிருபாகரன் மிகவும் குறும்புத்தனங்கள் செய்து ஊரில் அப்பாவுக்கு கெட்ட பெயரை வாங்கித் தருகிறான். ஒரு கட்டத்தில் சமுத்திரக்கனி, அவருடைய மனைவி சங்கவி சண்டை போட்டு பிரிகிறார்கள். அப்பாவின் கண்டிப்பில் இருந்து தப்பிக்க கிருபாகரன் அம்மாவுடன் அவரது மாமா வீட்டிற்குச் சென்று விடுகிறான். பிரிந்த கணவன் மனைவி இணைந்தார்களா, அப்பா, மகன் இருவரும் தங்களது தவறுகளை உணர்ந்து இணைந்தார்களா என்பதுதான் படத்தின் கதை.
நடிப்பு
படத்தலைப்பு ‘கொளஞ்சி’ கதாபாத்திரத்தில் சிறுவன் கிருபாகரன். ஒரு காட்சியில் கூட அவன் நடிக்கிறான் என்று சொல்ல முடியாதபடி அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறான். அவனது பேச்சிலும், முகபாவனையிலும், உடல்மொழியிலும் குறும்புத்தனம் கொப்பளிக்கிறது. பெரியார் கொள்கைகள்படி வாழ்ந்தாலும் அதிலிருந்து விலகி சிறு, சிறு தவறுகளைச் செய்யும் அப்பாவாக சமுத்திரக்கனி. மூத்த மகனிடம் கண்டிப்பும், இளைய மகனிடம் கனிவும் காட்டும், மனைவியை கை நீட்டி அடிக்கும் முரண் கொண்ட மனிதர்.
சமுத்திரக்கனி மனைவியாக சங்கவி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவி, அவருக்கு இன்னும் சிறப்பான காட்சிகளைக் கொடுத்திருக்கலாம். கிருபாகரன் நண்பனாக நசாத், நக்கல், நையாண்டி பண்ணுவதில் கைத்தட்டல் வாங்குகிறார். காதல் ஜோடிகளாக ராஜாஜ், நைனா சர்வார். மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்களும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
இசை, மற்றவை
நடராஜன் சங்கரன் இசையில் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது, பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். கிராமத்தைக் காட்டுவதில் இயல்பு மீறாமல் இருக்கிறது விஜயன் முனுசாமியின் ஒளிப்பதிவு.
திரைக்கதையில் இன்னும் அழுத்தம் கூட்டியிருக்கலாம். காதல் காட்சிகள் கொஞ்சம் வரம்பு மீறி இருக்கின்றன.