கதை
ஒரு வீட்டுக்குள் ஒரே குடும்பமாக வாழ்ந்த தமன்னா உள்ளிட்ட நான்கு பேய்கள் இருக்கின்றன. அந்த வீட்டில் பேய்கள் இருப்பது தெரிந்த வீட்டு உரிமையாளர் பிரேம் நான்கு பேரை அந்த வீட்டில் தங்க வைத்து பேய்கள் அங்கு இல்லை என்று தெரிய வைத்து வீட்டை விற்க நினைக்கிறார். வீட்டுக்கு வந்த நால்வரை நான்கு பேய்கள் விரட்டியதா, அந்த பேய்கள் அந்த வீட்டில் தங்கியிருக்க என்ன காரணம் என்பதுதான் பெட்ரோமாக்ஸ்.
நடிப்பு
தமன்னா தான் படத்தின் முதன்மைக் கதாபாத்திரம் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால், படம் முழுவதும் வருவது போன்று அவருக்கு காட்சிகளை அமைத்திருந்தாலும் அவர் சிறிது நேரமே வருவார். அழகான தமன்னாவைப் பேயாகப் பார்க்க யாருக்குத்தான் விருப்பம் இருக்கும். இருந்தாலும் அவருக்கு ஒரு சென்டிமென்ட்டை வைத்து அனுதாபப்பட வைத்துள்ளார்கள்.
முனிஷ்காந்த், காளி வெங்கட், சத்யன், திருச்சி சரவணகுமார் ஆகிய நால்வர்தான் பணத்துக்கு ஆசைப்பட்டு பேய் வீட்டை பிக் பாஸ் வீடு போல நினைத்து தங்குகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் பேய்களிடம் சிக்கிக் கொண்டு ஒவ்வொரு விதத்தில் நம்மை சிரிக்க வைக்கிறார்கள்.
இசை, மற்றவை
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். பேய் படத்திற்கு என்ன வேண்டுமோ அது உள்ளது. பெயருக்கு ஒரே ஒரு சிறிய பாடல், தமன்னாவுக்காக. ஒரு வீட்டுக்குள் இரவு நேரங்களில் வரும் காட்சிகள் அதிகம். ஒளிப்பதிவாளர் பேய் வீட்டையும் அழகாகக் காட்டியிருக்கிறார்.
+
இடைவேளைக்குப் பின் வரும் நகைச்சுவைக் காட்சிகள்
–
இடைவேளை வரை இழுக்கும் முன்பாதி