தமிழ் சினிமா பல தடைகளைத் தாண்டி எப்படியாவது ஒரு அடியாவது முன்னேறினாலும், அந்த சினிமாவை வைத்து எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் சிலரால் பின்னுக்கு இழுக்கப்படுகிறது.
ஒரு காலத்தில் திரைப்படங்களுக்கான விளம்பர தளமாக பத்திரிகைகள் மட்டுமே இருந்தன. தினசரி, வாரப் பத்திரிகைகளில் அதன் விளம்பரங்கள் வெளியாகும்.
அதன்பின் சாட்டிலைட் டிவிக்கள் வந்த பிறகு சில வசதியுள்ள தயாரிப்பாளர்கள் அவற்றில் விளம்பரங்களைக் கொடுத்தனர்.
இப்போது டிஜிட்டல் யுகம். இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள் என டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சில முன்னேற்றங்கள் வந்துள்ளன. அவற்றிலும் சினிமா விளம்பரங்கள் வர ஆரம்பித்துள்ளன.
குறைந்த செலவில் நிறைவான விளம்பரம் என்பது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இருக்கும் ஒரு வசதி.
தினசரி, வார பத்திரிகைகளில் ஆகியவற்றில் நீங்கள் பக்கத்தைப் புரட்டும் போது மட்டும்தான் உங்கள் கண்களில் விளம்பரம் படும். டிவிக்களில் நிகழ்ச்சிகளுக்கு இடையே தான் நீங்கள் விளம்பரங்களைப் பார்க்க முடியும். விளம்பரம் வரும் போது டிவியை மாற்றுபவர்கள்தான் பலர்.
ஆனால், இணையதளங்களில் அப்படியில்லை. நீங்கள் எத்தனை பக்கங்களைப் பார்த்தாலும் மேல்புறம், இடது, வலது பக்கங்கள் என நிரந்தரமாக அவை நம் கண்களுக்குத் தெரியும். இது பார்வையாளர்களுக்கும் எந்த இடைஞ்சலையும் தராது.
இணையதளங்களில் விளம்பரம் செய்வது, அதற்காக செலவிடும் பணத்திற்கு உரிய அளவில் பார்வையாளர்களைச் சென்றடையும்.
டிஜிட்டல் விளம்பரங்களில் மற்றொரு வகை சமூக வலைத்தளங்கள். அதில் டிவிட்டர் தளத்தைத்தான் சினிமா தயாரிப்பாளர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
டிவிட்டரில் ‘டிரென்டிங்’ என்ற ஒன்று வந்துவிட்டால் அது படத்திற்கு பெரிய விளம்பரம் என பொய்யான ஒரு தகவலை சில டிவிட்டர் பிரமோட்டர்கள் பரப்பி உள்ளனர். இந்த டிரென்டிங் விவகாரம் கடந்த சில வருடங்களில் அதிகரித்துள்ளது.
டிரென்டிங்கில் வந்த படங்கள் என்றால் அவை அனைத்துமே வெற்றிப் படங்களாக அல்லவா அமைந்திருக்க வேண்டும்.
மேலும், டிவிட்டரில் ஒரு படத்தின் விளம்பரத்தை ஒரு டிவிட்டர் கணக்காளர் வெளியிட்டால், அவர் மேலும் மேலும் வேறு தகவல்களைப் பதிவிடும் போது அந்த விளம்பரம் கீழே போய்விடும். அவற்றை யாரும் தேடிப் பிடித்துப் பார்க்கப் போவதில்லை.
அதோடு, டிவிட்டரில் அப்படி எழுதும் கணக்காளர்கள் பெரும்பாலும் அவர்களது சொந்தக் கருத்துக்களை என்றுமே பதிவிடுவதில்லை. பிரமோஷனுக்காக யாரோ ஒருவர் எழுதிக் கொடுப்பதை அப்படியே ‘காப்பி, பேஸ்ட்’ செய்து மட்டுமே பதிவிடுகிறார்கள்.
உண்மையிலேயே ஒரு படம் சிறப்பாக இருந்தால் அந்தப் படத்தைப் பற்றி பதிவிடுவதில் எந்த தவறுமில்லை. ஆனால், மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத, ரசிக்கப்படாத ஒரு படத்திற்கு பொய்யாக அதிக வரவேற்பு இருக்கிறது என்ற ஒரு மாயையை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள்.
இப்படியான போலியான டிவிட்டர் பிரமோஷன்களைச் செய்ய சிலர் தமிழ் சினிமா உலகில் இருக்கிறார்கள்.
அவர்கள் தங்களுக்கு வசதியான சிலரைத் தேர்ந்தெடுத்து அந்தப் படங்களைப் பற்றி அதிகபட்சமான ஸ்டார்களைக் கொடுக்க வைத்து தயாரிப்பாளரைத் திருப்திப்படுத்த முயற்சிக்கிறார்கள்.
அப்படி போலியான ஸ்டார்கள் வாங்கும் படங்களுக்குத் தியேட்டரில் கொஞ்சமாவது ஆட்கள் வர வேண்டுமே. அப்படி யாரும் வருவதில்லை. கடந்த வாரம் வெளிவந்த ‘இருட்டு’ படத்திற்கு இப்படித்தான் ஸ்டார்களை அள்ளிக் கொடுத்தார்கள். ஆனால், தியேட்டரில் அந்தப் படத்திற்கு வருகை தந்தவர்கள் மிக மிகக் குறைவு.
உண்மையில் இந்தப் படத்திற்கு பத்திரிகையாளர் காட்சி கூட போடவில்லை. ஒரு படம் என்றால் அதன், நிறை, குறைகளை அலசி ஆராய்ந்து எழுதுவதுதான் விமர்சனம். அப்படியான விமர்சனங்களை எழுதுபவர்களை இந்த டிவிட்டர் பிரமோட்டர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
டிவிட்டரில் எதிர்மறையாக வேண்டுமென்றே உருவாக்கப்படும், சில தவறான விமர்சனங்கள் காரணமாக நன்றாக இருக்கும் ஒரு படத்திற்குக் கூட ரசிகர்கள் வரத் தயங்குகிறார்கள். இது நல்ல படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் ஆகியோரை மிகவும் பாதிக்கிறது.
மேலும், அவற்றில் மறைமுகமாக மற்றவர்களையும் தாக்குகிறார்கள். சில சமயங்களில் ரசிகர்கள் என்ற போர்வையில் நேரடித் தாக்குதல்களும் நடக்கிறது.
அடிக்கடி இப்படி டிவிட்டரில் கருத்துக்கள் வர வேண்டும் என்பதற்கு சில காப்பி பேஸ்ட் இணையதளங்கள், போலியான டிவிட்டர் கணக்குகள் ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள்.
இப்படி டிவிட்டர் பிரமோஷன்களைத் தருவதில் தமிழ் சினிமாவில் சிடிசி (CTC) என்பவர்கள் மீது திரையுலகில் சில குற்றச்சாட்டுக்கள் ஏற்கெனவே எழுந்துள்ளன. சில பல லட்சங்களை வாங்கிக் கொண்டு ‘டிரென்டிங்’ என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக் கொண்டு தயாரிப்பாளர்களுக்குத் தேவையான முழுமையான விளம்பரத்தை அவர்கள் ஏற்படுத்தித் தருவதில்லை என்கிறார்கள். இவர்களது கையில் அடுத்து வந்துள்ளது ஆபாசப் படமான ‘கேப்மாரி’.
ஒரு படத்தை அதன் பூஜையிலிருந்து படம் வெளிவரும் வரை பத்திரிகைகள் இணையதளங்கள், டிவிக்கள் என அனைத்து தரப்பு மீடியாக்களிடமும் கொண்டு போய் சேர்ப்பதில் திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் (பிஆர்ஓ) கடுமையாக உழைக்கிறார்கள்.
அவர்களது உழைப்பையும் முடக்கும் அளவிற்கு சில பிரமோட்டர்கள் நடந்து கொள்வதை பிஆர்ஓ-க்களும் தயாரிப்பாளர்களும் உணர வேண்டும்.
மேலும், ஆபாசப் படமாக இருந்தாலும் பரவாயில்லை, அவற்றை டிரென்டிங்கில் வரவைத்து அவற்றை நல்ல படம் போல ரசிகர்களிடம் காட்டி ஓட வைத்துவிடலாம் என்பதும் டிவிட்டர் பிரமோட்டர்களின் எண்ணமாக இருக்கிறது.
இதற்கு இந்த வாரம் வெளிவர உள்ள ‘கேப்மாரி’ என்ற படம் ஒரு உதாரணம். நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆபாசமான கதை என்பதால்தான் ‘ஏ’ சான்றிதழ். இந்தப் படத்தை 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் பார்க்கக் கூடாது.
இந்தப் படத்தின் டிவிட்டர் பிரமோஷனை இப்போது ஆரம்பித்துள்ளார்கள். இப்படியான படங்கள் மக்களின் கண்களில் அதிகம் படுவது சமூகத்திற்கும், இளம் தலைமுறைக்கும் கேடான ஒரு விஷயம்.
நாட்டில் கற்பழிப்புகள், கொலைகள் அதிகம் வருவதற்கு இது போன்ற சில தரமற்ற ஆபாசத் திரைப்படங்களும் ஒரு மறைமுகக் காரணம் என முந்தைய சில சம்பவங்கள் நிரூபித்துள்ளன.
இன்று தமிழ் சினிமாவில் உயர்ந்த நிலையில் இருக்கும் நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர், ‘ஏ’ சான்றிதழ் பெறும் அளவிற்கு ‘கேப்மாரி’ என்ற இந்த ஆபாசப் படத்தை இயக்கியருக்கிறார் என்பது அதிர்ச்சியான ஒரு விஷயம்.
மோசமான படம் எடுத்தாலும் பரவாயில்லை, டிவிட்டர் டிரென்டிங் மூலம் அவற்றை மக்களிடம் கொண்டு போய் சேர்த்துவிடலாம் என நினைப்பது எந்த மாதிரியான மனோபாவம் ?.