துல்கர் சல்மான் நடிப்பில், பவன் சதினேனி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ (AOT).
கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா நிறுவனங்கள் வழங்கும் இப்படத்தை லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் அறிமுக நடிகை சாத்விகா வீரவல்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ள ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ (AOT) படத்தின் விளம்பரப் பணிகள் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் நடைபெற்ற தமிழ் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது படத்தின் உருவாக்கம், கதைக்களம், நடிகர்களின் அனுபவம் மற்றும் திரைப்படம் குறித்த தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால் பேசியதாவது,
“இந்தப் படத்தின் கதையையும் அதன் நோக்கத்தையும் அறிந்தபோது மிகவும் வியந்தேன். இயக்குநர் பவன் சதினேனியின் முயற்சியும், நல்ல உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது நோக்கமும் என்னை மிகவும் கவர்ந்தன. பாடல்களை எழுதும்போது எளிமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதிலும், படத்தின் கதையோட்டத்தைத் தாண்டிச் செல்லாத வகையில் வரிகளை அமைப்பதிலும் கவனமாக இருந்தேன். இந்தப் படத்திற்காக ஸ்வப்னா சினிமா மற்றும் குன்னம் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து ஒரு சிறப்பான முயற்சியை மேற்கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு எப்போதும் ஆதரவளிக்கும் நண்பன் ஜி.வி பிரகாஷுக்கு என் நன்றிகள்.
நம்முடைய கனவுகளை நாமே நம்புவது முக்கியம். ஆனால், அந்தக் கனவை நம்முடன் சேர்ந்து இன்னொருவர் நம்பி ஆதரித்தால்கூட அது மிகப்பெரிய பலமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒருவரை வாழ்க்கையில் சம்பாதித்துவிட்டால், வாழும்போதே சொர்க்கத்தைப் பார்த்த மகிழ்ச்சி கிடைக்கும். நமக்குப் பெரிய கனவுகள் இல்லாவிட்டாலும், பெரிய கனவுகளைக் கொண்டிருப்பவர்களுக்கு நம்மால் முடிந்த வகையில் ஆதரவளிக்க வேண்டும். அதுவே இந்தப் படத்தின் முக்கியமான நோக்கம் என்று நினைக்கிறேன். இந்த அழகான திரைப்படத்தில் பங்குபெற வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
நடிகர் சின்னி ஜெயந்த் பேசியதாவது,
“துல்கர் சல்மான், ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இயக்குநர் பவன் சதினேனி இந்தப் படத்தின் கதையைச் சொன்னபோதே நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். இப்படியும் ஒரு கதையை உருவாக்க முடியுமா என்று வியந்தேன். கதையை ஒவ்வொரு காட்சியாக விளக்கியபோது அவரது உழைப்பும், முயற்சியும் புரிந்தது. அவருக்கு முதலில் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படத்தில் நான் ஒரு பேராசிரியராக நடித்திருக்கிறேன். இதுவரை நான் நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரம் இது. பிளாஸ்மா, தொழில்நுட்பம், ஈர்ப்பு விசை என அறிவியல் சார்ந்த கடினமான வசனங்கள் இருந்ததால் அவற்றை மனப்பாடம் செய்ய நேரம் ஒதுக்கி நடித்தேன். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி.
ஜி.வி. பிரகாஷின் மிகப்பெரிய ரசிகன் நான். என்னுடைய விருப்பமான பாடல்களில் ஒன்று ‘பூக்கள் பூக்கும் தருணம்’. இந்தப் படத்திலும் மிகச் சிறப்பான பாடல்களைக் கொடுத்திருக்கிறார். துல்கர் சல்மானின் பல படங்களைப் பார்த்திருக்கிறேன். வெவ்வேறு மொழிகளில் நடித்தாலும் அந்தந்த மொழிகளில் அவரே டப்பிங் பேசுவது மிகவும் பாராட்டுக்குரியது. அவருடைய நடிப்பும், குரலும், புன்னகையும் ரசிகர்களைக் கவரக்கூடியவை.
இந்தப் படத்தின் கிளைமாக்ஸைப் பார்த்தபோது, எனது மகன் IAS தேர்வில் வெற்றி பெற்றபோது ஏற்பட்ட மகிழ்ச்சியும் உணர்வும் எனக்கு மீண்டும் ஏற்பட்டது. ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் குடும்பத்தினரின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல்லும் அருமையான திரைப்படம் இது. நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்துடன் அமர்ந்து பார்த்து ரசிக்கவும், உத்வேகம் தரக்கூடிய கூடிய திரைப்படமாக ‘AOT’ இருக்கும். இப்படம் அனைத்து மொழிகளிலும் பெரிய வெற்றியைப் பெறுவதுடன், தேசிய விருதுகளையும் வெல்லும் என நம்புகிறேன்” என்றார்.
நடிகை சாத்விகா வீரவல்லி பேசியதாவது,
“இங்கு வந்திருக்கும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது என்னுடைய முதல் திரைப்படம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் சென்னைக்கு வருவேன். எனது அம்மா திருவான்மியூரில் வசித்தபோது சென்னைக்கு வந்து செல்வது வழக்கம். இப்போது சென்னையிலேயே வசித்து வருகிறேன். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அடையாறு கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று நேரத்தைச் செலவிடுவேன். ஒருநாள் நம்மையும் மக்கள் அடையாளம் கண்டுகொள்ளும் வாய்ப்பு கிடைக்குமா என்று நினைத்திருக்கிறேன். இப்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பலருக்குக் கிடைக்காத இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்.
தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் சார் என்மீது நம்பிக்கை வைத்து இவ்வளவு முக்கியமான கதாபாத்திரத்தை வழங்கியதுடன், மேலும் இரண்டு படங்களிலும் நடிக்க வாய்ப்பளித்திருப்பதற்கு நன்றி. துல்கர் சல்மான் போன்ற திறமையான நடிகருடன் இணைந்து பணியாற்றியது மிகப்பெரிய அனுபவம். ஜி.வி. பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு வழங்கியுள்ள இசையும், அவரது பங்களிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலம். குறிப்பாக, ‘ராதே ராதே’ பாடலில் அவரது குரலும் இசையும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி. பாடலாசிரியர் பாலாஜி மற்றும் படத்தை வெளியிட ஆதரவளிக்கும் காந்தி சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
நடிகர் சின்னி ஜெயந்த் படப்பிடிப்பில் மிகவும் கலகலப்பாக இருப்பார். என்னுடைய தடுமாறும் தமிழில் பேசும்போதும் எனக்கு நல்ல துணையாக இருந்தார். பல ஆண்டுகால அனுபவம் கொண்ட அவர், புதுமுகமான எனக்கு அளித்த அன்பும் ஆதரவும் அவரது எளிமையான குணத்தை வெளிப்படுத்துகிறது. ‘AOT’ திரைப்படம் அனைவரின் அன்புடனும் உழைப்புடனும் உருவாகியுள்ளது. வரும் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். தொடர்ந்து தமிழ் திரைப்படங்களிலும் நடிக்க விரும்புகிறேன்” என்றார்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பேசியதாவது,
“‘AOT’ படத்தின் கதையைக் கேட்ட நாளிலிருந்தே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. சில படங்களின் கதையைக் கேட்கும்போதே அவை சிறப்பான படங்களாக அமையும் என்ற நம்பிக்கை வந்துவிடும். அந்த வகையில் இந்தப் படத்தின் கதை என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது. படத்தைப் பார்த்த பிறகும், இந்திய சினிமாவில் முக்கியமான நவீன கிளாசிக் திரைப்படமாக இது இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனக்குத் தனிப்பட்ட முறையிலும் இந்தப் படம் மிகவும் பிடித்திருக்கிறது. பல விருதுகளைப் பெறும் என்றும் நம்புகிறேன். குடும்பத்துடன் அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய திரைப்படமாக இது இருக்கும்.
துல்கர் சல்மானின் கதைத் தேர்வை நான் எப்போதும் வியந்து பார்ப்பேன். அவரது திரைப்படப் பட்டியலே மிகச் சிறப்பானது. ஏற்கெனவே அவருடன் ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். இந்தப் படமும் நிச்சயம் பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன். தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் சார் எனது முதல் படமான ‘டார்லிங்’ படத்தைத் தயாரித்து என்னை நாயகனாக அறிமுகப்படுத்தியவர். அவருக்கு எப்போதும் ஒரு வெற்றிகரமான பார்வை உண்டு. சாத்விகா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இயக்குநர் பவன் சதினேனி, ஸ்ருதி ஹாசன், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலரும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள். குடும்ப உறவுகள், சுய விழிப்புணர்வு உள்ளிட்ட முக்கியமான விஷயங்களைப் பேசும் இந்தப் படம் ரசிகர்களிடம் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ஆண்டில் வெளியான எனது படங்களின் வெற்றிப் பயணத்தில் ‘AOT’ ஒரு சிறப்பான நிறைவாக அமையும் என நம்புகிறேன். பாடல்களைச் சிறப்பாக எழுதிய பாலாஜி, ஸ்ரீமணி உள்ளிட்ட பாடலாசிரியர்கள் மற்றும் ஒட்டுமொத்தத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளில் படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். பத்திரிகையாளர்களான உங்களுடைய கருத்துகளையும் விமர்சனங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் பேசியதாவது,
“நான் ஒரு மெட்ராஸ்காரன் நான் சென்னையில் பிறந்து, இங்கேயே பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தவன். சட்டக் கல்லூரியில் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, 23 வயதிலேயே தயாரிப்பாளராகப் பயணத்தைத் தொடங்கினேன். ஆரம்பத்தில் இரண்டு, மூன்று படங்களைத் தயாரித்துவிட்டு வேறு தொழிலுக்குச் சென்றுவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், இன்று 50 ஆண்டுகளாகத் திரைத்துறையில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். இதுவரை பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறேன். அந்தப் பயணத்தில் ஒவ்வொரு தருணத்திலும் கிடைத்த அனுபவங்கள்தான் என்னை இங்கே கொண்டு வந்திருக்கின்றன.
2022ஆம் ஆண்டு ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) படத்தின் கதையைக் கேட்டேன். அரை மணி நேரம் கதை கேட்டதுமே இந்தப் படத்தை நிச்சயம் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அதே சமயம் ஸ்வப்னா என்னிடம் வந்து, நானும் நீங்களும் இணைந்து இந்தத் தலைமுறைக்கான ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டார். இளைய தலைமுறையினருடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு எப்போதும் பிடிக்கும். அதனால் மகிழ்ச்சியுடன் இந்தப் படத்தைத் தொடங்கினோம்.
ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) ஒரு சிறந்த ஊக்கமளிக்கும் திரைப்படம். ஒரு கிராமத்தில் பிறந்த சாதாரணப் பெண் என்னென்ன கனவுகளைக் காண்கிறாள், அந்தக் கனவுகளை அடைய அவளுக்குக் கிடைக்கும் ஆதரவு என்ன என்பதை அழகாகப் பேசுகிறது. இந்தப் படத்தின் விநியோக உரிமையை ஏற்றுக்கொண்ட காந்தி அவர்களுக்கு நன்றி. படத்தின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையும் ஆர்வமும் பாராட்டுக்குரியது. ஜி.வி. பிரகாஷை தமிழில் முதன்முதலாக நாயகனாக அறிமுகப்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி. ஒரே நேரத்தில் இத்தனை படங்களில் தரமாகப் பணியாற்றுவதுடன் நடிப்பிலும் கவனம் செலுத்துவது எப்படி என்று அவரிடம் ஒருமுறை கேட்டிருக்கிறேன். துல்கர் சல்மான் மிகவும் இயல்பான நடிகர். அவர் வசனம் பேசும்போது உண்மையாகவே அந்தக் கதாபாத்திரம் பேசுவது போன்ற உணர்வு ஏற்படும். அவருடைய நேர்மை, வெளிப்படையான குணம் எனக்குப் பிடிக்கும். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய பெயரையும் வெற்றியையும் பெற்றுத் தரும்.
சாத்விகாவைப் பொறுத்தவரை, இந்தக் கதைக்கு ஒரு புதுமுக நடிகை பொருத்தமாக இருப்பார் என்று நினைத்துத் தேடினோம். அப்போது எங்களுக்குக் கிடைத்தவர்தான் சாத்விகா. அவர் தமிழ்ப் பெண். சிகாகோவில் பிறந்து வளர்ந்தவர். இந்தப் படத்திற்காக இந்தியா வந்த அவரை மீண்டும் சிகாகோவுக்கு அனுப்பாமல் இங்கேயே வைத்திருக்கிறேன். அவருடைய நடிப்பும், திரையில் அவர் வெளிப்படுத்தும் அழகும் எனக்குப் பிடித்திருக்கிறது. இந்தப் படம் வெளியாகும் முன்பே அவருக்கு மேலும் இரண்டு தெலுங்குப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அவருக்கு இந்தத் திரையுலகில் மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்று நம்புகிறேன்.
பத்திரிகையாளர்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு உங்களுக்குப் பிடித்திருந்தால் மனதாரப் பாராட்டி எழுதுங்கள். நம் வீட்டில் இருக்கும் ஒரு தங்கை அல்லது மகளுக்கு என்னென்ன கனவுகள் இருக்கும், அந்தக் கனவுகளை அவள் எப்படி அடையலாம் என்பதைத்தான் இந்தப் படம் எடுத்துச் சொல்கிறது. குடும்பத்துடன் அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) இருக்கும். இப்படத்தை ஆதரிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்” என்றார்.
நடிகர் துல்கர் சல்மான் பேசியதாவது,
“சென்னை எனக்குப் பிடித்தமான இடங்களில் ஒன்று. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் வெளியானபோது பத்திரிகையாளர்கள் அளித்த ஆதரவை என்னால் மறக்கவே முடியாது. அந்தப் படத்தில் பெரிய நட்சத்திரப் பட்டாளம் கிடையாது. ஒரு சிறிய காதல் கதையாகவே விளம்பரப்படுத்தினோம். ஆனால், பத்திரிகையாளர் காட்சியைப் பார்த்துவிட்டு நீங்கள் எழுதிய விமர்சனங்களும் செய்திகளும்தான் அந்தப் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தன. இப்போதுகூட அல்லு அரவிந்த் சாரிடம் இந்தப் படத்திற்காகப் பத்திரிகையாளர்களைச் சந்திக்கச் சொல்லியிருந்தேன். அவர்களுக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்டுங்கள். பிடித்திருந்தால் அவர்களே சிறந்த முறையில் படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்று கூறினேன். அதற்காக எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.
‘சீதா ராமம்’ படத்திற்குப் பிறகு இந்தக் கதையைக் கேட்டேன். ஆரம்பத்தில் இது கதாநாயகியை மையமாகக் கொண்ட திரைப்படமாகத் தோன்றியது. ஆனால் கதை மிகவும் பிடித்திருந்ததால் இந்தப் படம் வேறு யாரிடமும் சென்றுவிடக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. இறுதியில் எனக்கிருந்த மற்ற படங்களின் பொறுப்புகளுக்கு மத்தியிலும் இந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்தேன். இது ஒரு குறிப்பிட்ட மொழிக்கான கதை கிடையாது.
இந்தப் படத்தைப் பெரிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருப்பதற்குக் காரணம் வணிகத்தைத் தாண்டிய சினிமா மீதான அவர்களுடைய காதலும் ஆர்வமும்தான். படப்பிடிப்பின்போது அனைவரும் ஒரு குடும்பமாகப் பழகினோம். படப்பிடிப்பில் கழிந்த ஒவ்வொரு தருணமும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. படத்தின் டீசர் வெளியானபோது கிடைத்த வரவேற்பு எங்களையே ஆச்சரியப்படுத்தியது. நாங்கள் எதிர்பார்த்ததைவிடப் பெரிய அளவில் ரசிகர்களைச் சென்றடைந்தது. சினிமாவின் அழகே அதுதான். எந்தப் படம் ரசிகர்களின் மனதைத் தொடும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. நாம் நம்பும் கதையை நேர்மையாகவும் அன்புடனும் உருவாக்கினால் அது நிச்சயம் மக்களிடம் சென்றுவிடும் . இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் எனக்கு ஒரு தம்பியைப் போன்றவர். அவருக்கு இடையின் மீதுள்ள காதலும், அர்ப்பணிப்பும் ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுகிறது. ஒரே நேரத்தில் பல படங்களில் பணியாற்றியும், இசைப் பணிகளைத் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே முடித்துக் கொடுப்பது பாராட்டுக்குரியது. ஏற்கெனவே ‘லக்கி பாஸ்கர்’ படத்திற்காக அவர் இசையமைத்தபோதே இந்தப் படம் வெற்றிபெறும் என்று கூறியிருந்தார். இந்தப் படத்திற்கும் அதே நம்பிக்கையை அளித்திருக்கிறார்.
அல்லு அரவிந்த் சார் எப்போதும் நேர்மறையான எண்ணங்களுடன் அனைவருக்கும் நம்பிக்கை அளிப்பவர். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள இருக்கிறது. சின்னி ஜெயந்த் சாருடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். பல ஆண்டுகால அனுபவம் கொண்ட அவர் இந்தப் படத்தில் பேராசிரியராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் தொடர்ந்து பல படங்களில் பணியாற்ற விரும்புகிறேன். சாத்விகா மிகவும் புத்திசாலியான, திறமையான நடிகை. எங்களுக்குள் வயது வித்தியாசம் இருந்தாலும் அவரிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அவர், பொறியியல் படித்ததுடன் ஒரு நிறுவனத்திலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். படப்பிடிப்பில் நன்கு தயாராக வந்து நடிப்பார். இந்தப் படத்தில் அவரைப் பார்க்கும்போது இது அவருடைய முதல் படம் என்றே தோன்றாது. கல்பனா என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்ததற்காக அவருக்கு நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பலரும் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள். அதனால் ஒரு பெண் குழந்தையின் கனவுகளும், அவளுக்குக் குடும்பம் அளிக்க வேண்டிய ஆதரவும் எங்களுக்கு நன்றாகப் புரிகிறது. நம் வீட்டில் இருக்கும் மகள்கள், சகோதரிகள் மற்றும் பெண்களுக்காக இந்தப் படத்தைப் பாருங்கள். படம் உங்களுக்குப் பிடித்திருந்தால் மற்றவர்களிடமும் பகிர்ந்து ஆதரவு அளியுங்கள். நிச்சயம் அனைவரையும் இந்தப் படம் உணர்வுப்பூர்வமாகத் தொடர்புகொள்ளும் என்று நம்புகிறேன்” என்றார்.