மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஆர்எக்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ரெஜினா கசாண்ட்ரா, நாசர், ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் இணைந்து தயாரிக்க, பிரதீப் பூபதி இணை தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘பாம்’ ஆகிய படங்களை இயக்கிய விஷால் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார். ஹரிஹரன் ராஜுவின் கதைக்கு ஆஷா மீரா ஐயப்பன் வசனங்கள் எழுதியுள்ளார். இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் சென்னையில் நிறைவடைந்துள்ளது.
ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்க, எஸ்.கே. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ஜி.கே. பிரசன்னா கவனிக்க, கே. மனோஜ் குமார் கலை இயக்கப் பணிகளை மேற்கொள்கிறார்.