ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று கடந்த இரு பாகங்களிலும் வெற்றி பெற்ற ‘பொலிமேரா’ திரைப்படத்தின் மூன்றாம் பாகமான ‘பொலிமேரா 3’ விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் வீராவி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அர்ஜுனின் முதல் பார்வை தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
வம்சி நந்திபாடி என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் வம்சி நந்திபாடி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி. (ஏசியன் குழுமம்) நிறுவனத்தின் பரத் நரங்குடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். டாக்டர் அனில் விஸ்வநாத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
இதுவரை அர்ஜுன் ஏற்று நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது இப்படத்தின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
காமாட்சி பாஸ்கர்லா, பாலாதித்யா, கெட்டப் ஸ்ரீனு, ராகேந்து மௌலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சித்தார்த் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிருஷ்ண பிரசாத் இசையமைக்கிறார்.