டோக்கியோ திரைப்பட விழாவில் ‘காகித மலர்’

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள ‘காகித மலர்’ (The Paper Flower) திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் Asian Future பிரிவில் உலகத் திரையிடலுக்குத் தேர்வாகி, இரண்டு காட்சிகள் திரையிடப்பட்டன.

இந்தத் திரையிடலில் படத்தின் தயாரிப்பாளர் பிரேமா செழியன் மற்றும் அவரது மகள் அதிதா செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இரண்டு காட்சிகளும் அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் நடைபெற்றன. ஜப்பானிய ரசிகர்கள் படத்தை ஆர்வத்துடன் ரசித்ததுடன், திரையிடல் முடிவில் பலத்த கைதட்டல்களுடன் வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பிரேமா செழியன் தமிழிலும், அதிதா செழியன் ஆங்கிலத்திலும் பதிலளித்தனர். அவர்களின் பதில்கள் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.

படம் குறித்துப் பேசிய டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் தேர்வுக் குழு உறுப்பினர் கென்ஜி இஷிசாகா (Kenji Ishizaka), டிஜிட்டல் யுகத்தில் குறைந்த பட்ஜெட்டிலும் உலகத் தரத்திலான திரைப்படங்களை உருவாக்க முடியும் என்பதற்கு செழியனின் ‘காகித மலர்’ சிறந்த உதாரணம் என்று பாராட்டினார். மேலும், பாலிவுட்டைத் தாண்டி இந்தியாவில் உருவாகும் தனித்துவமான திரைப்படங்களை உலக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் இப்படத்தைத் தேர்வு செய்ததாகவும், படம் பார்வையாளர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றதாகவும் தெரிவித்தார்.

திரைப்பட விமர்சகர் கேட்டி ரைஃப் (Katie Rife), ‘காகித மலர்’ திரைப்படத்தை இனிமையும் இலக்கிய நயமும் கொண்ட தமிழ் படைப்பு என்று பாராட்டியதுடன், விழாவில் மற்ற திரைப்படங்களிலிருந்து தனித்துவமாகத் திகழ்ந்து தனது கவனத்தை ஈர்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, ஜப்பான் மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர்களும் இப்படத்தைத் திரையிடவும் விநியோகிக்கவும் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், ஒலி வடிவமைப்பாளர் தபஸ் நாயக், செழியனின் உதவியாளர்கள் பிச்சுமணி, ஆர்.பி. ராஜா, ராஜ்கிரண், ஜோசப் இருதயராஜ், பேச்சியப்பன், நடிகர் பராந்தக சோழன், நடிகை ஜனனி செண்பகா உள்ளிட்ட படக்குழுவினருக்கும், உயிரெழுத்து பதிப்பகம் சுதிர், அன்னம் பதிப்பகம் கதிர் மற்றும் பபாசி அமைப்பினருக்கும் தயாரிப்பாளர் பிரேமா செழியன் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படத்திற்குக் கிடைத்த வெற்றியையும் அங்கீகாரத்தையும் பாராட்டுகளையும் தங்களது அன்பிற்குரிய செழியனுக்குச் சமர்ப்பிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘காகித மலர்’ திரைப்படம் பல்வேறு உலக நாடுகளில் தனது திரைப்பயணத்தைத் தொடரவுள்ளது.

Read Previous

சூர்யாவின் ‘சீன்’ – 3 நாட்களில் 145 கோடி வசூல்

Read Next

பொலிமேரா 3 – அர்ஜுன் முதல் பார்வை