ஒரே ஷாட்டில் ‘அகடம்’ திரைப்படத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த இயக்குநர் இசாக், ஆரி நடிப்பில் ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தை இயக்கியவர். தற்போது 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் பிரியன் நடிப்பில் ‘வெகுளி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை, புதிய போஸ்டர் மூலம் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பிரியன் நடித்த ‘அரணம்’ படத்தைத் தயாரித்த தமிழ்த் திரைக்கூடம் நிறுவனமே இப்படத்தையும் தயாரித்துள்ளது. வேதா பிலிம்ஸ் சார்பில் விஜயா சரவணன் இணை தயாரிப்பு செய்துள்ளார். இசாக் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் திவ்யா சந்திரன், பாய்ஸ் மணிகண்டன், ஷர்மிளா, பூவையார், டேனி, சாப்ளின் பாலு, இமான் அண்ணாச்சி, ஈரோடு சரவணன், சேரன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நாகார்ஜுன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, இலங்கையில் தேசிய விருது பெற்ற ஷமீல் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை தேவராஜ் கவனிக்க, நட்ராஜ் கலை இயக்கப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
சமீபத்தில் இந்தியாவையே உலுக்கிய கொடூரச் சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களால் எளிதில் கணிக்க முடியாத வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. தணிக்கைக் குழுவினரின் பாராட்டைப் பெற்ற இப்படத்திற்கு, 13 நொடிகள் மட்டுமே நீக்கப்பட்டு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
பாய்ஸ் மணிகண்டன் முதல்முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாப்ளின் பாலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இமான் அண்ணாச்சி இஸ்லாமியர் கதாபாத்திரத்திலும், பூவையார் கதையின் திருப்புமுனையாக அமையும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். டேனி காவல்துறையிடம் சிக்கித் தவிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஏற்கெனவே வெளியான இப்படத்தின் பாடல்களும் டீசரும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. படத்தைப் பார்த்த திரையுலகப் பிரபலங்களும் பாராட்டியுள்ளனர்.
வித்தியாசமான கதைக்களம் மற்றும் திரைக்கதையுடன் உருவாகியுள்ள ‘வெகுளி’ திரைப்படம் பார்வையாளர்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கையை இயக்குநர் இசாக் தெரிவித்துள்ளார்.