ராம் சரண், சுகுமார் கூட்டணி படம் ஆரம்பம்

ராம் சரண் நடிப்பில், இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

‘ரங்கஸ்தலம்’ படத்திற்குப் பிறகு ராம் சரண் – சுகுமார் கூட்டணி மீண்டும் இணையும் இப்படத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. #RC17 #RC2Sukku என குறிப்பிடப்படும் இப்படத்தின் பூஜை நிகழ்வில் தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகர் சிரஞ்சீவி கிளாப் அடித்துப் படத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், தில் ராஜுவுடன் இணைந்து படத்தின் திரைக்கதையைப் படக்குழுவினரிடம் வழங்கினார். டி-சீரிஸ் நிறுவனத்தின் பூஷன் குமார் கேமராவை இயக்கி முதற்கட்ட படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். விழாவில் பங்கேற்ற இயக்குநர்களும் முதல் காட்சியை இயக்கினர்.

ராம் சரண் – சுகுமார் கூட்டணியில் ஏற்கெனவே வெளியான ‘ரங்கஸ்தலம்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் இருவரும் இணைந்திருப்பதுடன், ராம் சரணை இதுவரை பார்த்திராத தோற்றத்தில் சுகுமார் காட்சிப்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவீன் யெர்னேனி, ஒய். ரவிசங்கர், விஜய பிரசாத் பண்ட்ரெட்டி மற்றும் பூஷன் குமார் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இதில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

Read Previous

‘ஜான் டோ’ நவம்பர் 13 வெளியீடு

Read Next

சீன் – இசை, டிரைலர் வெளியீட்டு விழா