ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘தங்கப்புள்ள’ பாடலை இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார்.
லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கும் இப்படத்திற்கு மார்ஷல் ராபின்சன் இசையமைக்கிறார். பா. விஜய் எழுதியுள்ள ‘தங்கப்புள்ள’ பாடலை முருகவேல் பாடியுள்ளார்.
தந்தை – மகன் உறவின் ஆழத்தையும், பிரிவின் வலியையும், தந்தையின் அளவற்ற அன்பையும் மையமாகக் கொண்டு இப்பாடல் உருவாகியுள்ளது. பொதுவாக தந்தை – மகன் அல்லது தந்தை – மகள் இடையிலான பாசத்தையும், அவர்கள் ஒன்றாகப் பகிர்ந்துகொள்ளும் தருணங்களையும் பதிவு செய்யும் பாடல்கள் தமிழ் சினிமாவில் அதிகம் இடம்பெற்றுள்ளன.
ஆனால், மகனைப் பிரிந்து வாழும் தந்தை ஒருவர், அவனது வாழ்க்கையில் நிகழும் மகிழ்ச்சியான தருணங்களைத் தொலைவிலிருந்து யாருக்கும் தெரியாமல் ரசிக்கும் உணர்வை ‘தங்கப்புள்ள’ பாடல் பேசுகிறது. மகனிடம் தனது அன்பை நேரடியாக வெளிப்படுத்த முடியாத தந்தையின் ஏக்கமும், அவனது மகிழ்ச்சியில் மனநிறைவு காணும் பாசமும் பாடலின் மையமாக அமைந்துள்ளன.
மார்ஷல் ராபின்சனின் இசை, பா. விஜய்யின் வரிகள், முருகவேலின் குரல் ஆகியவை இணைந்து தந்தையின் மனதில் இருக்கும் சொல்லப்படாத உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. பாடலின் காட்சியமைப்பும் அதன் உணர்வுகளுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள இப்பாடல் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைக் களமாகக் கொண்டு உருவாகும் ‘தகப்பன்’ திரைப்படம், தந்தை – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளைப் பேசும் படமாக உருவாகி வருகிறது. ‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு ஜீவா முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் நடிக்கும் இப்படத்தில், ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார்.
K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார்.
டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘தகப்பன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை ZEE தமிழ் நிறுவனமும், இணையவழி ஒளிபரப்பு உரிமையை ZEE 5 நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.