காதல், நட்பு, ஆண் – பெண் உறவுகளுக்கு இடையிலான புரிதல் ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகும் காதல் திரைப்படங்கள், உணர்வுப்பூர்வமான கதைக்களத்தால் ரசிகர்களைக் கவரக்கூடியவை. அந்த வகையில், வித்தியாசமான கல்லூரிப் பின்னணி, இரண்டு காதல் அனுபவங்கள், உறவுகளுக்குள் எழும் எதிர்பார்ப்புகள் மற்றும் முரண்பாடுகள் என இளமைக்கே உரிய அம்சங்களுடன் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘ஹைக்கூ’.
விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன், ஸ்ரீதேவி அப்பாலா, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படம், காதலைப் பற்றிய புதிய பார்வையை முன்வைக்க முயற்சித்திருக்கிறது.
கல்லூரியில் படிக்கும் இளைஞனான ஏகன், எதிர்பாராத ஒரு சம்பவத்தால் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படுகிறார். பின்னர், பெண்கள் கல்லூரியில் சேரும் அவருக்கு, அங்கு படிக்கும் ஸ்ரீதேவி அப்பாலா மீது காதல் மலர்கிறது. ஆனால், சாதி வேறுபாடு, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சினைகள் அவர்களது காதலுக்குத் தடையாக அமைகின்றன. ஒரு கட்டத்தில் இருவரும் பிரிய, ஏகன் பின்னர் சென்னையில் ஒரு நல்ல வேலையில் இருக்கிறார். அவரது வாழ்க்கையில் பெமினா ஜார்ஜ் வருகிறார். காதல் என்ற பெயரில் கொடுமைகளைச் சந்திக்கும் பெமினாவுக்கு ஏகன் உதவுகிறார். போகப் போக இருவருக்கும் இடையே காதல் மலரும் நிலையில், தனது முதல் காதலை ஏகன் அணுகிய விதம் புதிய காதலுக்குள் பிரச்சினைகளை உருவாக்குகிறது. கடந்த காலக் காதலின் தாக்கத்திலிருந்து ஏகன் விடுபட்டாரா, புதிய காதலை அவர் புரிந்துகொண்டாரா, இருவரும் இணைந்தார்களா என்பதுதான் ‘ஹைக்கூ’ படத்தின் கதை.
மனோ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஏகன், காதல் தோல்வி, மனதுக்குள் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை, புதிய காதல் தரும் மகிழ்ச்சி என வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார். கதாபாத்திரத்தின் இயல்பான தன்மைக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருப்பது படத்துக்கு பலம். ஸ்ரீதேவி அப்பாலா தனது கதாபாத்திரத்தின் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். பெமினா ஜார்ஜ், காதலில் எதிர்பார்ப்புகளுக்கும் சுயமரியாதைக்கும் இடையே போராடும் பெண்ணாக கவனம் ஈர்க்கிறார். அதிர்ச்சி அருண், சுப்பிரமணிய சேது, மைம் கோபி, இந்துமதி மணிகண்டன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை இயக்கியிருக்கும் யுவராஜ் சின்னசாமி, இளைஞர்களின் காதல் அனுபவங்களையும், உறவுகளில் ஏற்படும் புரிதல் சிக்கல்களையும் மையமாக வைத்து கதையை உருவாக்கியிருக்கிறார். பெண்கள் கல்லூரியில் ஒரே ஆண் மாணவர் என்ற வித்தியாசமான கதைக்களம் தொடக்கத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தினாலும், அந்த அம்சத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் திரைக்கதை அமையவில்லை. முதல் காதல் தோல்விக்குப் பிறகு உருவாகும் புதிய காதல், பழைய காதலின் நினைவுகளால் பாதிக்கப்படுவது போன்ற விஷயங்கள் கதைக்கு அழுத்தம் சேர்க்கின்றன. ஆனால், இரண்டாம் பாதியில் கதையை நகர்த்துவதற்கான வலுவான சம்பவங்கள் குறைவதால், சில காட்சிகள் நீளமாகத் தோன்றுகின்றன. காதல் உறவுகளில் சுயமரியாதையும் தனித்துவமும் எவ்வளவு முக்கியம் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
சித்து குமாரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் காதல் காட்சிகளுக்கு உணர்வுப்பூர்வமான தன்மையை வழங்குகின்றன. பிரியேஷ் குருசாமியின் ஒளிப்பதிவு, கல்லூரி மற்றும் காதல் காட்சிகளின் மனநிலையை வெளிப்படுத்த உதவியிருக்கிறது. சக்தி பிரனேஷின் படத்தொகுப்பு, குறிப்பாக இரண்டாம் பாதியில், இன்னும் கச்சிதமாக அமைந்திருக்கலாம். சில காட்சிகளைச் சுருக்கியிருந்தால் திரைக்கதையின் வேகம் அதிகரித்திருக்கும்.
மொத்தத்தில், காதல் என்பது ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்ப்பதோ, கடந்த கால உறவுகளின் நகலாகப் புதிய உறவை அமைத்துக்கொள்வதோ அல்ல; ஒருவரின் தனித்துவத்தை மற்றொருவர் புரிந்துகொள்வதுதான் என்பதைச் சொல்ல முயற்சித்திருக்கிறது ‘ஹைக்கூ’.
வித்தியாசமான கதைக்கருவும், நடிகர்களின் நடிப்பும் படத்துக்குப் பலம் சேர்த்தாலும், திரைக்கதையின் நீளமும் சில இடங்களில் ஏற்படும் தொய்வும் முழுமையான ரசனைக்கு முட்டுக்கட்டையாக அமைகின்றன. காதல் கதைகளில் புதுமையான கருத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு சில சுவாரஸ்யமான தருணங்களைத் தரும் ‘ஹைக்கூ’.