சட்டமும் நீதியும் 2 – வெப் சீரிஸ் விமர்சனம்

நீதிமன்றத்தில் நடைபெறும் சட்டப் போராட்டங்களையும், அதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் மர்மங்களையும் மையமாக வைத்து உருவாகும் கிரைம் திரில்லர் கதைகளுக்கு எப்போதும் தனி சுவாரஸ்யம் உண்டு. அந்த வகையில், வலுவான வாதங்கள், எதிர்பாராத திருப்பங்கள், உண்மையைத் தேடும் விசாரணை என ‘சட்டமும் நீதியும் 2’ வெப் தொடர் அமைந்துள்ளது. புதிய வழக்கு மற்றும் புதிய கதாபாத்திரங்களுடன் பரபரப்பான நீதிமன்ற டிராமாவாக உருவாகியிருக்கிறது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்தக் கொலை தொடர்பாக நான்கு போலீஸ்காரர்களைக் கைது செய்யும் காவல்துறை, அவர்களே குற்றவாளிகள் என்று கூறுகிறது. ஆனால், தங்கள் குடும்பத்தினர் நிரபராதிகள் என்றும், இந்தக் கொலையில் அவர்களுக்குத் தொடர்பில்லை என்றும் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் முறையிடுகிறார்கள். இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட இன்ஸ்பெக்டரின் மனைவியும், திறமையான வழக்கறிஞருமான வரலட்சுமி சரத்குமார், குற்றம் சாட்டப்பட்ட நான்கு போலீஸ்காரர்களுக்கும் தண்டனை வாங்கிக் கொடுப்பதில் தீவிரம் காட்டுகிறார். அவரது எதிர்ப்பைச் சம்பாதிக்க விரும்பாத மற்ற வழக்கறிஞர்கள் இந்த வழக்கை ஏற்கத் தயங்கும் நிலையில், சாதாரண வழக்கறிஞரான சரவணன் அவர்களுக்காக வாதாட முன்வருகிறார். வலுவான வாதங்களை முன்வைக்கும் வரலட்சுமியை, ஆதாரங்களின் துணையுடன் எதிர்கொள்ளும் சரவணன், இந்த வழக்கின் பின்னணியில் இருக்கும் உண்மைகளைக் கண்டறிந்தாரா, கொலைக்கான காரணம் என்ன, இறுதியில் நீதி யார் பக்கம் நின்றது என்பதுதான் ‘சட்டமும் நீதியும் 2’ தொடரின் கதை.

சாதாரண வழக்கறிஞராக இருந்தாலும், வழக்கை அணுகும் விதத்திலும், ஆதாரங்களை முன்வைக்கும் நுணுக்கத்திலும் தனித்துவம் காட்டும் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர், தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். எதிர்த்தரப்பின் வாதங்களை ஆதாரங்களால் முறியடிக்கும் காட்சிகளிலும், தான் செய்த தவறை உணர்ந்து வருந்தும் தருணங்களிலும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கணவரை இழந்த துயரத்தையும், அவரைக் கொன்றவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற உறுதியையும் மனதில் சுமந்தபடி நீதிமன்றத்தில் கம்பீரமாக வாதாடும் வரலட்சுமி சரத்குமார், தனது கதாபாத்திரத்துக்கு வலிமை சேர்க்கிறார். எதிர்த்தரப்பு வழக்கறிஞரைத் தனது வாதங்களால் தடுமாற வைப்பதிலும், ஆதாரங்களின் காரணமாகக் குற்றவாளிகள் தப்பித்துவிடுவார்களோ என்ற மனப்போராட்டத்தை வெளிப்படுத்துவதிலும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். பிரேம்குமார், லாவண்யா, கவிதா பாரதி, ஆறு பாலா, கல்லூரி வினோத் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கி தொடரின் சுவாரஸ்யத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.

எஸ். கோகுலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு, நீதிமன்றக் காட்சிகளுக்கு அழுத்தமான காட்சி மொழியை வழங்கியிருக்கிறது. கேமரா கோணங்களும் ஒளி–நிழல் அமைப்பும் கதையின் தீவிரத்தை உணர்த்துகின்றன. விபின் பாஸ்கரின் பின்னணி இசை, முக்கியமான தருணங்களின் உணர்ச்சிகளையும் நீதிமன்ற வாதங்களின் தீவிரத்தையும் அதிகரித்து, பார்வையாளர்களை கதையுடன் ஒன்றச் செய்கிறது. ஆதிஸ்வரன்.ஆர். படத்தொகுப்பில் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அடுத்ததாக என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பது தொடரின் முக்கியமான பலம். பாலாஜி செல்வராஜ் மற்றும் பிரதீப் மரியான் எழுதிய திரைக்கதை, எளிமையான ஒரு கொலை வழக்கைச் சுற்றிப் பல சந்தேகங்களையும் திருப்பங்களையும் உருவாக்கி, அத்தியாயங்கள் தொய்வின்றி நகர்வதற்கு உதவியிருக்கிறது.

தொடரை இயக்கியிருக்கும் பாலாஜி செல்வராஜ், பெரும்பாலான காட்சிகள் நீதிமன்றத்துக்குள்ளேயே நடைபெற்றாலும், அவற்றை ஒரே மாதிரியான காட்சிகளாக மாற்றிவிடாமல் சுவாரஸ்யமாகக் கையாண்டிருக்கிறார். கொலையா, தற்கொலையா என்ற கேள்விக்கு ஒரு கட்டத்தில் பார்வையாளர்களை ஒரு முடிவுக்கு வரச் செய்து, அடுத்தடுத்த திருப்பங்கள் மூலம் அந்த முடிவையே சந்தேகிக்க வைக்கும் திரைக்கதை அணுகுமுறை பாராட்டுக்குரியது. வழக்கின் உண்மையை முன்கூட்டியே கணித்துவிட முடியாத வகையில் மர்மத்தைத் தக்கவைத்திருப்பது தொடரின் விறுவிறுப்பை அதிகரிக்கிறது.

முதல் சீசனைப் போலவே, இரண்டாம் சீசனும் நீதிமன்ற வாதங்கள், ஆதாரங்களின் முக்கியத்துவம், கதாபாத்திரங்களின் உணர்ச்சிப் போராட்டங்கள் ஆகியவற்றை இணைத்து ஒரு சுவாரஸ்யமான கிரைம் திரில்லர் அனுபவத்தை வழங்குகிறது. எளிமையான கதையை விறுவிறுப்பான திரைக்கதையாலும், வலுவான நடிப்பாலும் ரசிக்க வைக்கும் ‘சட்டமும் நீதியும் 2’, அடுத்தடுத்த திருப்பங்களுடன் பார்வையாளர்களை இறுதிவரை கட்டிப்போடும் தொடராக அமைந்திருக்கிறது.

Read Previous

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘அக்கா’

Read Next

ஹைக்கூ – விமர்சனம்