கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘அக்கா’

வெப் தொடர் டிரெய்லர் வெளியீடு

கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ள ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், தர்மராஜ் ஷெட்டி எழுதி இயக்கியுள்ள இத்தொடர் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகிறது.

பெர்னூரு என்ற கற்பனை உலகில் பெண்கள் அதிகாரம் செலுத்தும் கேங்ஸ்டர் குடும்பங்களின் கதையை மையமாகக் கொண்டு இத்தொடர் உருவாகியுள்ளது. தலைமுறை தலைமுறையாகத் தொடரும் அதிகாரம், பாரம்பரியம், விசுவாசம் மற்றும் பழிவாங்குதல் ஆகியவற்றுக்கு இடையிலான மோதல்களைப் பேசும் கதையாக இது அமைந்துள்ளது.

இதில் பவானி, ருத்ரா ஆகிய கதாபாத்திரங்களில் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே நடித்துள்ளனர். இருவரின் மாறுபட்ட கொள்கைகளும் லட்சியங்களும் பெர்னூருவின் அதிகார அமைப்பையே சீர்குலைக்கும் மோதலுக்கு வழிவகுக்கின்றன. இவர்களுடன் தன்வி ஆஸ்மி, மகேஷ் மஞ்ச்ரேக்கர், அன்ஷுமன் புஷ்கர், மோனிகா பன்வார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதுகுறித்து இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி கூறுகையில், வழக்கமான கேங்ஸ்டர் கதைகளிலிருந்து மாறுபட்டு, பெண்கள் தலைமையில் இயங்கும் ஓர் உலகத்தை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார். அதிகாரம், பாரம்பரியம், பகைமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு எதிர்பாராத திருப்பங்களுடன் இத்தொடர் உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பவானி கதாபாத்திரம் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், தனது பாரம்பரியத்தையும் அதிகாரத்தையும் பாதுகாக்கத் துணியும் பெண்ணாக பவானி இருப்பதாகத் தெரிவித்தார். ராதிகா ஆப்தேவுடன் இணைந்து நடித்தது சிறந்த அனுபவமாக இருந்ததாகவும் கூறினார்.

ருத்ரா கதாபாத்திரம் குறித்து ராதிகா ஆப்தே பேசுகையில், ஏற்கெனவே நிலவும் அதிகார அமைப்புக்குச் சவால் விடும் துணிச்சலும் லட்சியமும் கொண்ட பெண்ணாக ருத்ரா உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

‘தி ரொமான்டிக்ஸ்’, ‘தி ரயில்வே மென்’, ‘மஹாராஜ்’, ‘மண்டலா மர்டர்ஸ்’ உள்ளிட்ட படைப்புகளைத் தொடர்ந்து, நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் இணைந்து உருவாக்கியுள்ள ‘அக்கா’ வெப் தொடர் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகிறது.

Read Previous

அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘ஜான் டோ’

Read Next

சட்டமும் நீதியும் 2 – வெப் சீரிஸ் விமர்சனம்