ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘சென்சார்’ திரைப்படத்தின் முழுமையான திரைக்கதையை (Official Shooting Screenplay), படம் வெளியாவதற்கு முன்பே புத்தகமாக வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் பொதுவாகத் திரைப்படம் வெளியான பிறகே திரைக்கதை புத்தகமாக வெளியிடப்படும் நிலையில், இந்த முயற்சி புதிய முன்னெடுப்பாக அமையவுள்ளது.
‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’, ‘ஆதார்’ ஆகிய படங்களை இயக்கிய ராம்நாத் பழனிக்குமார், ‘திண்டுக்கல் சாரதி’ படத்திற்குத் திரைக்கதை, வசனம் எழுதியவர். இவர் இயக்கும் ‘சென்சார்’ படத்தின் திரைக்கதையைத் திரைப்படம் உருவாவதற்கு முன்பே வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம், எழுத்துக்கும் திரைக்கதை ஆசிரியர்களின் படைப்பாற்றலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் கூறுகையில், “தமிழ் சினிமாவில் திரையில் நட்சத்திரங்களைக் கொண்டாடிய பிறகே திரைக்கதையைக் கொண்டாடுகிறோம். ‘சென்சார்’ திரைப்படத்தின் திரைக்கதையைப் படம் வெளியாவதற்கு முன்பே புத்தகமாக வெளியிடுவதன் மூலம், கதையை அதன் அசல் வடிவில் வாசகர்கள் அனுபவிக்க வேண்டும் என விரும்புகிறோம். திரைப்படத்தைப் பார்ப்பதற்கு முன்பே அதன் எழுத்து வடிவத்திற்குள் வாசகர்கள் பயணிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இது திரைக்கதை ஆசிரியர்களின் படைப்பாற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் முயற்சி” என்றார்.
புத்தகம் மற்றும் திரைப்படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.