‘நந்தா’ தயாரிப்பாளரின் புதிய படம்

‘நந்தா’, ‘மௌனம் பேசியதே’ ஆகிய படங்களைத் தயாரித்த அபராஜீத் பிலிம்ஸ் கணேஷ் ரகு, அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கும் புதிய படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’ படத்தைத் தயாரித்த கணேஷ் ரகு, தொடர்ந்து அமீர் இயக்குநராக அறிமுகமான ‘மௌனம் பேசியதே’ படத்தையும் தயாரித்தார். இரண்டு படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில், இளையராஜா இந்த புதிய படத்திற்கு இசையமைக்கிறார்.

நெகிழ்ச்சியான கதைக்களம் மற்றும் ஊக்கமளிக்கும் திரைக்கதையுடன் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. நவம்பர் மாதம் முதல் கோவையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

தொடக்க விழாவில் இயக்குநர்கள் பாலா, அமீர், சேரன், சசிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல் காட்சியைப் பாலா இயக்க, சேரன் கிளாப் அடிக்க, சசிக்குமார் கேமராவை இயக்கி வைத்தார். இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகர் சிவக்குமார், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, பூர்ணிமா பாக்யராஜ், இயக்குநர் கரு. பழனியப்பன் உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வாஞ்சி முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, பரதன் வசனம் எழுதுகிறார். பாலுமகேந்திரா கலை இயக்கத்தையும், பூபதி வேதகிரி படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். மீரா ஆடை வடிவமைப்பையும், ஹரிஷ் ஒலிக்கலவையையும் மேற்கொள்கின்றனர். நிகில் முருகன் மக்கள் தொடர்புப் பணிகளைக் கவனிக்கிறார். விஜயகுமார் R. S., காசி வர்மன் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.

படத்தில் நடிக்கும் முன்னணி நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

Read Previous

‘சம்பராலா ஏடி கட்டு’ படப்பிடிப்பு நிறைவு

Read Next

புத்தகமாக வெளியாகும் ‘சென்சார்’ திரைக்கதை