ரோஹித் KP இயக்கத்தில், சாய் துர்கா தேஜ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’ (SYG). ‘ஹனுமேன்’ படத்தைத் தயாரித்த பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் K. நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இதையொட்டி, படத்தின் உருவாக்கம், பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் படக்குழுவினரின் கொண்டாட்டங்களைப் பதிவு செய்த மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
10-க்கும் மேற்பட்ட கட்டங்களாக, 160 நாட்களுக்கும் மேலாகப் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகியுள்ள இப்படம், சாய் துர்கா தேஜின் திரைப்பயணத்திலும் முக்கியமான படமாகக் கருதப்படுகிறது.
படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த சாய் துர்கா தேஜ், அவர்களுடன் இணைந்து கொண்டாடினார்.
‘சம்பராலா சங்கராந்தி’ என்ற பெயரில் விளம்பரப்படுத்தப்பட்டு வரும் இப்படம், 2027 ஜனவரி 12 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, கன்னட நடிகர் தனஞ்செயா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெகபதி பாபு, நரேஷ் வி. கிருஷ்ணா, சாய் குமார், ஸ்ரீகாந்த், அனன்யா நாகள்ள உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வெற்றிவேல் பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய, B. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். நவீன் விஜய் கிருஷ்ணா படத்தொகுப்பையும், காந்தி நதிக்குடிகர் தயாரிப்பு வடிவமைப்பையும் கவனித்துள்ளனர்.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டப் பணிகள் தொடங்கவுள்ளன. பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சங்கராந்தி பண்டிகைக் கால வெளியீடு ஆகியவற்றால் இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.