ஆணவப் படுகொலை என்ற சமூகத்தில் தொடர்ந்து விவாதிக்கப்படும் முக்கியமான பிரச்சனையை, ஒரு குடும்பத்தின் உறவு மற்றும் இளம் காதல் ஜோடியின் வாழ்க்கையுடன் இணைத்து வித்தியாசமான திரைக்கதையாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘பாரீஸ் கபே’. காதல், குடும்ப உறவு, குற்ற உணர்வு மற்றும் சமூக அக்கறை ஆகியவற்றை மையமாக வைத்து பயணிக்கும் இப்படம், ஒரு மர்மமான சம்பவத்தின் மூலம் தனது கதையை நகர்த்துகிறது.
அரசு மருத்துவராக பணியாற்றும் குரு சோமசுந்தரமும், கட்டிடக்கலை நிபுணராகவும் சமூக சேவகியாகவும் இருக்கும் அனுமோலும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும் இவர்களது வாழ்க்கை, சிறந்த கணவன் – மனைவிக்கான உதாரணமாகவே இருக்கிறது. இவர்களைப் போன்ற ஒரு தம்பதியை பார்க்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு அவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக பயணிக்கிறது.
இதற்கிடையே, மருத்துவம் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு செல்கிறார் குரு சோமசுந்தரம். அங்கு இருக்கும் காஃபே ஒன்றில், சென்னையை சேர்ந்த இளம் காதல் ஜோடியின் புகைப்படத்தை பார்க்க நேரிடுகிறது. மகிழ்ச்சியாக இருக்கும் அந்த ஜோடியின் புகைப்படத்தை பார்த்ததும் அதிர்ச்சியடையும் அவர், அவர்களைப் பற்றிய விவரங்களை விசாரிக்கத் தொடங்குகிறார்.
அப்போது அந்த காதல் ஜோடி தொடர்பான சில உண்மைகளை தெரிந்துகொள்ளும் குரு சோமசுந்தரம், பதற்றத்துடன் சென்னை திரும்புகிறார். தனது மனைவியிடம் அந்த ஜோடி குறித்து கூறுவதோடு, அவர்கள் இருவரும் தற்போது உயிருடன் இல்லை என்ற அதிர்ச்சியான தகவலையும் தெரிவிக்கிறார்.
கணவர் கூறியதை கேட்டு அதிர்ச்சியடையும் அனுமோல், பத்திரிகை செய்திகள் மூலம் அந்த இளம் காதல் ஜோடி தொடர்பான முழு விவரங்களையும் தெரிந்துகொள்கிறார். அப்போது குரு சோமசுந்தரத்திற்கும் அந்த சம்பவத்திற்கும் இருக்கும் தொடர்பை அறிந்துகொண்டு அவர் மீது கோபமடையும் அனுமோல், கணவரை விட்டு பிரிந்து செல்கிறார்.
பெற்றோர் பிரிந்துவிட்டதை அறிந்துகொள்ளும் அவர்களது மகள் அர்ச்சனா, தனது காதலர் விஜய் விஷ்வாவுடன் அமெரிக்காவில் இருந்து சென்னை வருகிறார். பிரிந்து வாழும் தனது பெற்றோரை மீண்டும் ஒன்றாக சேர்க்க அவர் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெற்றதா, பாரிஸில் குரு சோமசுந்தரம் பார்த்த அந்த இளம் காதல் ஜோடி யார், அவர்கள் எப்படி உயிரிழந்தார்கள், அந்த சம்பவத்திற்கும் குரு சோமசுந்தரத்திற்கும் என்ன தொடர்பு ஆகிய கேள்விகளுக்கு விடை சொல்வது தான் ‘பாரீஸ் கபே’.
சினிமாவை வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் பார்க்காமல், சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வலிமையான ஊடகமாகவும் பயன்படுத்த முடியும் என்பதை உணர்ந்து, தனது முதல் படத்திலேயே ஆணவப் படுகொலை என்ற முக்கியமான சமூக பிரச்சனையைப் பற்றி பேசியிருக்கிறார் இயக்குநர் சரஜ் சீலன்.
முதன்மை கதாபாத்திரங்களில் கணவன் – மனைவியாக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் இருவரும் தங்களது இயல்பான நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்கள். கணவர் செய்த செயல் தனக்கு தெரியாமல் மறைக்கப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடையும் அனுமோல், குறிப்பாக ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலியையும், கோபத்தையும் தனது கதாபாத்திரத்தின் மூலம் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியிருக்கிறார். கணவரின் மீது கோபம் கொள்ளும் காட்சிகளில் அவரது நடிப்பு கதாபாத்திரத்தின் உணர்வை சரியாக கடத்துகிறது.
குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தவறு செய்துவிட்டு, அதே குடும்பத்திற்காக அந்த தவறுக்கான தண்டனையையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் அளவான நடிப்பை வழங்கியிருக்கிறார். தனது முகபாவனைகள் மற்றும் வசன உச்சரிப்பு மூலம் கதாபாத்திரத்தின் மனநிலையை வெளிப்படுத்துபவர், ஆங்காங்கே நகைச்சுவை கலந்த வசனங்களின் மூலம் சிரிக்கவும் வைக்கிறார்.
இளம் காதல் ஜோடியாக நடித்திருக்கும் விஜய் விஷ்வா மற்றும் அர்ச்சனா, தங்களது துள்ளலான நடிப்பின் மூலம் காட்சிகளுக்கு இளமைத் தன்மையை கொண்டு வந்திருக்கிறார்கள். மற்றொரு காதல் ஜோடியாக வரும் சாய் விக்கி மற்றும் நயனா சாய், தங்களது நடிப்பின் மூலம் சில காட்சிகளில் பார்வையாளர்களின் மனதை கனக்கச் செய்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சதீஷ்.ஜி, அமெரிக்கா மற்றும் பாரிஸ் போன்ற வெளிநாட்டு இடங்களின் பின்னணியை கதைக்கு தேவையான வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகளையும் படத்தின் தேவைக்கேற்ப இணைத்திருப்பதோடு, தயாரிப்பாளரின் பட்ஜெட்டையும் கருத்தில் கொண்டு காட்சிகளை நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார்.
கே இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக அமைந்திருக்கின்றன. குறிப்பாக கதையின் தன்மைக்கு ஏற்ப அமைந்திருக்கும் பின்னணி இசை, முக்கியமான காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
ஆணவப் படுகொலை போன்ற தீவிரமான சமூக பிரச்சனையை மையமாக வைத்து கதை சொல்லப்பட்டாலும், அதை நேரடியாக பிரச்சாரம் செய்வது போல் இல்லாமல் வித்தியாசமான திரைக்கதை மூலம் நகர்த்தியிருப்பது படத்தின் சிறப்பு. அந்த வகையில் படத்தொகுப்பாளர் வி.ஜே.சாபு ஜோசப்பின் பணி இயக்குநரின் கதை சொல்லும் முறைக்கு பெரிதும் துணை நிற்கிறது.
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனது குரலை பதிவு செய்திருக்கும் இயக்குநர் சரஜ் சீலன், அதை வெறும் பிரச்சாரமாகவோ அல்லது போதனை செய்வது போன்றோ சொல்லாமல், காதல், குடும்ப உறவு மற்றும் குற்ற உணர்வு ஆகியவற்றுடன் இணைத்திருக்கிறார். குறிப்பாக இளம் காதல் ஜோடியின் வாழ்க்கையையும், இன்ப துன்பங்களை ஒன்றாக எதிர்கொள்ளும் கணவன் – மனைவியின் உறவையும் மையமாக வைத்து, சமூக அக்கறையுடன் கூடிய அழகான காதல் கதையாகவும், விறுவிறுப்பான திரைக்கதையாகவும் ‘பாரீஸ் கபே’வை உருவாக்க முயற்சித்திருக்கிறார்.