பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும், வித்தியாசமான காதல், நகைச்சுவை மற்றும் பேன்டஸி கலந்த தமிழ் திரைப்படமான ‘சிட்டுக்குறிஞ்சி’ தற்போது டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளது. இப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அறிமுக இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள ‘சிட்டுக்குறிஞ்சி, படத்தில் ரஜித் மேனன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் தீப்ஷிகா, நக்ஷா சரண், வி.ஜே. பப்பு, ஜி. எம். குமார், எல். வி. ஆதவன், ராம்ஸ், ஹலோ கந்தசாமி, தேனி முருகன், சுஜாதா, கராத்தே ராஜா, ஈஸ்வர்பாபு, சத்யசீலன், வேளச்சேரி ஸ்ரீதர், மஞ்சு, ஜோன்ஸ், கிருஷ்ணகுமார், அட்வகேட் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஸ்ரீராம் கார்த்திக் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாக அதன் பிரம்மாண்டமான தொழில்நுட்ப உருவாக்கம் அமைந்துள்ளது. 1983-ஆம் ஆண்டை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்திற்காக, கொடைக்கானல் பள்ளங்கி மலைப்பகுதியில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய கிராம செட் அமைக்கப்பட்டு, அந்தக் காலகட்டத்தின் இயல்பான சூழல் யதார்த்தமாக மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், படத்தின் பின்னணி இசை உலகப் புகழ்பெற்ற ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் அமைந்துள்ள புடாபெஸ்ட் ஸ்கோரிங் கம்பெனி ஸ்டுடியோவில், சர்வதேச இசைக் கலைஞர்கள் பங்கேற்ற நேரடி லைவ் ஆர்கெஸ்ட்ரா மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்களுக்கு உலகத் தரத்திலான இசை அனுபவத்தை வழங்க படக்குழு உறுதியாக நம்புகிறது.
இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மாறா இசையமைக்கிறார். பிரான்சிஸ் ராஜ்குமார் A. ஒளிப்பதிவையும், மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.
டி. ஜூட் ஆனந்த் தயாரித்துள்ள இப்படத்தின் வெளியீட்டுத் தேதி மற்றும் இதர அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.