சினிமா ரசிகர்களுக்கு இப்போது தேவைப்படும் ஒரு இனிமையான, இயல்பான பொழுதுபோக்கு படமாக வந்திருக்கிறது ‘அன்பே டயானா’. பாரி இளவழகன் கதை எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடித்திருக்கும் இந்தப் படம், சென்னை பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு, நீண்டகால ஒருதலை காதலை மிக எளிமையாகவும், நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கிறது. பெரிய அளவிலான ட்விஸ்ட் இல்லாமலேயே, கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் குடும்பச் சூழலையும் அழகாகப் பின்னிப் பிணைத்திருக்கும் இந்தப் படம், பார்வையாளர்களை வயிறு வலிக்கச் சிரிக்க வைத்து, இறுதியில் இதமான உணர்வுடன் வெளியே அனுப்புகிறது.
பெரம்பூரில் வசிக்கும் இளைஞன் பாரி இளவழகன், அதே பகுதியில் வாழும் ஆங்கிலோ-இந்தியப் பெண் ரம்யா ரங்கநாதனை கல்லூரி காலம் முதலே மனதார காதலித்து வருகிறார். ரம்யா அவரது காதலை ஏற்க மறுத்தாலும், நல்ல நண்பராகவே அவருடன் பழகி வருகிறார். பல வருட காத்திருப்புக்குப் பிறகு ரம்யா சம்மதம் தெரிவிக்கும் தருணத்தில், திடீரென்று பாரி பின்வாங்குகிறார். இந்த தயக்கத்தின் பின்னணியில் என்ன இருக்கிறது? அவர்களின் காதல் எப்படி முடியும்? என்பதை இயல்பான நகைச்சுவை தொனியில் விவரிக்கிறது படம்.
நாயகனாக நடித்த பாரி இளவழகன், பக்கத்து வீட்டுப் பையன் போன்ற எளிமையான தோற்றத்துடன், மிகவும் இயற்கையான நடிப்பால் கவனத்தை ஈர்க்கிறார். நீண்டகால காதல் கைகூடும் போது ஏற்படும் குழப்பங்கள், கண்டிப்பான அம்மாவின் முன் காதலைச் சொல்ல முடியாத தவிப்பு, உணர்வுகளை அடக்கி வைக்கும் மனநிலை போன்றவற்றை எந்தவித அலட்டலும் இல்லாமல் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக வந்திருக்கும் ரம்யா ரங்கநாதன், ஆங்கிலோ-இந்தியப் பெண்ணின் வேடத்தில் துல்லியமாகப் பொருந்துகிறார். ஆங்கிலம் கலந்த அவரது சென்னைத் தமிழ் உச்சரிப்பு ரொம்பவே இயல்பாக இருக்கிறது. காதலனை மிரட்டும் காட்சிகள், அவரது தந்தையிடம் அதிரடியாகப் பேசும் காட்சிகள் என அவர் கொடுக்கும் காமெடி டைமிங் அற்புதம். அவரது நடிப்பு திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
நாயகனின் தந்தையாக நடித்த சேத்தன், அன்றாட வாழ்க்கையில் நாம் அடிக்கடி பார்க்கும் சாதாரண கணவர்-தந்தை வேடத்தில் அசத்தியிருக்கிறார். காலையில் மனைவிக்குப் பயந்து நடப்பவராகவும், மாலையில் வீட்டில் அதிகாரம் செலுத்துபவராகவும் மாறும் அவரது குண மாற்றம் ரொம்பவே நம்பிக்கையாக இருக்கிறது.
அம்மாவாக வந்திருக்கும் ரோஜா, தோற்றம், பேச்சு, நடிப்பு அனைத்திலும் கம்பீரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். கண்டிப்பான தாயாக இருந்தாலும், தன் தவறை உணர்ந்து மனம் மாறும் காட்சிகளில் அவரது அனுபவம் தெரிகிறது. நண்பராக வந்திருக்கும் பரிதாபங்கள் கோபி, பெங்களூரு தமிழர் வேடத்தில் படம் முழுவதும் சிரிப்பைத் தூண்டுகிறார்.
ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட், பெரம்பூர் பகுதியை அழகிய கோணங்களில் படம்பிடித்திருக்கிறார். பழக்கமான இடங்களாக இருந்தாலும், அவரது கேமரா அந்தப் பகுதியின் அழகை இன்னும் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக பருந்து கோணக் காட்சிகள் கண்ணைப் பறிக்கின்றன.
பரத் சங்கரின் இசை, பாடல்களையும் பின்னணி இசையையும் மிக இயல்பாக அமைத்திருக்கிறது. படத்தொகுப்பாளர் பார்த்தா.எம்.ஏ, காட்சிகளை தொய்வின்றி இணைத்து, படத்தை சீராகவும் வேகமாகவும் நகர்த்தியிருக்கிறார்.
ஒட்டுமொத்தமாக, ‘அன்பே டயானா’ ஒரு எளிமையான காதல் நகைச்சுவைப் படம் என்றாலும், அதில் இருக்கும் கதாபாத்திரங்களின் தனித்துவமும், அவர்களின் இயல்பான உரையாடல்களும் படத்தை தனித்து நிற்க வைக்கின்றன. சாதி, மதம், மொழி, இனம் போன்ற வேறுபாடுகளை அன்பு எப்படி கடந்து செல்கிறது என்பதை இயக்குநர் பாரி இளவழகன் மிக அழகாகவும், மிக எளிமையாகவும் சொல்லியிருக்கிறார்.
முதல் பாதியை மெதுவாகவும் மென்மையாகவும் நகர்த்திச் சென்ற அவர், இரண்டாம் பாதியை வேகமாகவும் சிரிப்புடனும் கொண்டு சென்றிருக்கிறார். குடும்பத்துடன் போய் பார்க்கலாம் என்று சொல்லத் தகுந்த படம்.