ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், கதையின் நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் பேசும் படமாக உருவாகியுள்ளது.
டிரைலரில், ஒரு தடகள விளையாட்டு வீரன் தனக்கான அங்கீகாரத்துக்கு கோர்ட் படியேறி போராடும், உணர்ச்சிபூர்வமான காட்சிகளும், வலுவான வசனங்களும் படத்தின் களத்தை வெளிப்படுத்துவதுடன், படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
இப்படத்திற்காக 75 லட்ச ரூபாயில் கோர்ட் வளாக செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் கேஜேஆர் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு A.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பு, ஷெரீப் நடன அமைப்பு அமைக்கிறார்கள்.
விரைவில் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.