ஓபன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அரவிந்த் வெள்ளைபாண்டியன், அன்புராசு கணேசன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘தூக்குதுரை’.
யோகி பாபு நடித்து வெளிவந்த ‘ட்ரிப்’ படத்தை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் யோகி பாபு, இனியா, மொட்டை ராஜேந்திரன், மகேஷ், பாலசரவணன், சென்ராயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஸ்வின், சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் டென்னிஸ் கூறுகையில்,
18 ஆம் நூற்றாண்டு, 1999 மற்றும் 2023 ஆகிய மூன்று கால கட்டங்களில் நடக்கும் கதையம்சம் கொண்ட இப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் கதையாக இருந்தாலும், அதை முழுக்க முழுக்க நகைச்சுவையாகக் கொடுத்திருக்கிறோம்.
மன்னர்கள் காலத்தில், ராஜாவாக வாழ்ந்தவர்களின் தலைமுறைகள் தற்போது சாதாரண மக்களாக வாழ்ந்து கொண்டிருந்தாலும், அவர்களின் தலைமையில் தான் ஊர் கோயில் திருவிழாக்கள் நடக்கும். அப்படிப்பட்ட ஒரு குடும்பம், அந்த குடும்பம் தொடர்புடைய கோயில் திருவிழாவில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையப்படுத்தியது தான் படத்தின் கதை.
இதில் யோகி பாபு திருவிழாக்களில் சினிமா போடுபவராக, முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, கிராமத்துப் பெண்ணாக அவருக்கு ஜோடியாக இனியா நடித்திருக்கிறார். அந்த ஊரின் ராஜ குடும்பத்து வாரிசாக மாரிமுத்து நடித்திருக்கிறார், அவரது தம்பியாக நமோ நாராயணன் நடித்திருக்கிறார்.
ராஜ பரம்பரை, 18 ஆம் நூற்றாண்டு என்பதால் படத்தில் எதாவது சர்ச்சையான விஷயத்தை பேசியிருக்கிறோம் என்று நினைக்க வேண்டாம். இது முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாக கொண்ட படம் மட்டுமே. மன்னர் காலத்து கதை ஒன்றும் உள்ளது, ஆனால், அதை அனிமேஷனில் தான் சொல்லியிருக்கிறோம்.
இந்த படத்தின் கதை மன்னர் காலத்தை மையப்படுத்தி இருப்பதால், மாமன்னன், மன்னாதி மன்னன் போன்ற தலைப்புகளை வைக்க முயற்சித்தோம். ஆனால், ‘மாமன்னன்’ என்ற தலைப்பு ஏற்கனவே இருந்ததால், அது சார்ந்த எந்த ஒரு தலைப்பும் வைக்க முடியாத சூழல் உருவானது. அப்போது வேறு தலைப்பை வைக்க யோசித்த போது தான் இளவரசர்களை துரை என்றும் அழைப்பார்கள். மன்னர்களின் முக்கிய அடையாளம் அவருடைய மகுடம், அதை தூக்கி காண்பிக்கும் போது மக்கள் வணங்குவார்கள், அதனால் தூக்குதுரை என்று வைக்க முடிவு செய்தோம். அந்த வார்த்தை கமர்ஷியலாக இருப்பதோடு, ஏற்கனவே மக்களிடம் பிரபலமானதாக இருந்ததால் படத்திற்கு அதுவும் ஒரு பலமாக அமைந்திருக்கிறது.” என்றார்.
யோகி பாபு – இனியா காதலால் தான் படத்தில் சில பிரச்சனை வரும், அந்த பிரச்சனை எப்படி போய் முடிகிறது, என்பதும் கதை. இரண்டு பேருக்கும் இடையே காதல் காட்சிகள் இருக்கிறது. ஆனால், பாடல் காட்சிகள் இல்லை.
யோகி பாபுவால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் வந்ததில்லை, அவர் கொடுத்த தேதிகளை நாங்கள் சரியாகப் பயன்படுத்தினோம், அவரும் எங்களுக்கு நல்லபடியாக ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் நடித்த படங்களில் நான் உதவியாளராக பணியாற்றியிருக்கிறேன், அதனால் அவரை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். ட்ரிப் படத்திலும் எங்கள் இருவருக்கும் நல்ல நட்பு இருந்தது, இந்த படத்திலும் அவர் எனக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்தார்,” என்றார்.