தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் பலரையும் சிரிக்க வைத்து வருபவர் வடிவேலு. அவரது படங்களின் காட்சிகள் இல்லையென்றால் இன்றைய மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ‘கன்டென்ட்’டே கிடைத்திருக்காது.
கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருந்த வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அதற்கு முன்னதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய் நன்கொடையை வழங்கினார்.
பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது,
ஆட்சிக்கு வந்த ஒன்றரை மாதத்திலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு உலகமே உற்று பார்க்கும் விதத்தில் கொரானோவை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். அவரது ஒவ்வொரு செயல்பாடும் மெய்சிலிர்க்க வைக்கிறது. யார் மனதையும் புண்படுத்தாமல் அவர் எடுக்கும் நடவடிக்கைகள் நெகிழ வைக்கிறது.
அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். என்னை எத்தனை ஊசி போடச் சொன்னாலும் போட்டுக் கொள்வேன்.
பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் சிறப்பான திட்டம்.
ராம்நாடு, ஒரத்தநாடு என பல நாடுகள் இருக்கு. இவ்வளவு நாடுகளைப் பிரித்தால் அவ்வளவுதான். இதைக் கேட்கும்போதே தலை சுத்துது. தமிழ்நாடு நல்லாத்தானே இருக்கு. அதை ஏன் பிரிக்க வேண்டும்,” என்றார்.