‘விஸ்வரூபம்’ படக்குழுவினர் 7ம் தேதி பறந்து, பறந்து பாடல்களை வெளியிட இருக்கின்றனர்.
கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்துள்ள ‘விஸ்வரூபம்’ படத்தின் இசை வெளியீடு 7ம் தேதியன்று சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 நகரங்களிலும் வெளியிடப்படுகிறது.
இப்படத்தின் இசை வெளியீடு கடந்த மாதம் 7ம் தேதியன்று கமல்ஹாசன் பிறந்த நாள் அன்று வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால், வானிலை காரணமாக அது தள்ளி போடப்பட்டது.
தனி விமானம் மூலம் படக் குழுவினர், கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார், இசையமைப்பாளர்கள் சங்கர்-இஷான்-லாய், மூன்று ஊர்களுக்கும் பறந்து செல்கின்றனர்.
சென்னையில் இருந்து 7ம் தேதி அதிகாலையில் மதுரை புறப்படுகிறார்கள். அங்கு 10 மணி அளவில் மதுரை வேலம்மாள் கல்லூரி மைதானத்தில் ‘விஸ்வரூபம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறும்.
பின்னர் , அதே விமானத்தில் கோவை செல்கிறார்கள். அங்கு இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு விழா நடைபெறும்.
மாலையில் கோவையில் இருந்து சென்னைக்கு வருகிறார்கள். சென்னையில் மாலை 6.30 மணிக்கு விழா நடைபெறும். விழா நடைபெறும் இடம் இன்னும் முடிவாகவில்லை.
தமிழ்த் திரையுலக வரலாற்றில் மூன்று நகரங்களில் ஒரே நாளில் ஒரு படத்தின் இசை வெளியீடு நடப்பது இதுவே முதல் முறை.