தயாரிப்பு – மெட்ராஸ் என்டர்பிரைசஸ் – எஸ். நந்தகோபால்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ரவி லல்லின்
இசை – F.S. பைசல்
பாடல்கள் – விவேகா
ஒளிப்பதிவு – ராஜேஷ் யாதவ், ஆரோ
படத்தொகுப்பு – சுராஜ் கவி
சண்டைப் பயிற்சி – திலீப் சுப்பராயன்
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி
நடிப்பு – விமல், தீபா ஷா, ஓவியா, மனோபாலா மற்றும் பலர்.
வெளியான தேதி – 14 பிப்ரவரி, 2013
அறியாத வயதில் வரும் காதல் காதலே அல்ல, அறிந்த வயதில் வரும் காதலே காதல் என சொல்லும் படம். நல்ல விஷயத்தை எடுத்துக் கொண்டு அதை தேவையற்ற சில காட்சிகளையும், நகைச்சுவையையும் வைத்து சுவாரசியத்தை குறைத்து விட்டார்கள்.
விமல், ஓவியா இருவரும் பள்ளியில் படிக்கும் போது தீவிரமான காதலர்களாக விடுகிறார்கள். விஷயம் வீட்டுக்குத் தெரிந்து இருவரையும் பிரித்து விடுகிறார்கள். அதன் பின் விமல் வெளிநாடு சென்று விடுகிறார். ஓவியா சென்னைக்குச் சென்று விடுகிறார்.
வெளிநாட்டில் இருந்து திரும்பும் விமல், பேருந்தில் யதேச்சையாக சந்திக்கும் தீபா ஷா மீது காதல் கொள்கிறார். விமலின் அண்ணியின் தங்கைதான் தீபா ஷா என்பது பின்னர் தெரிய வர, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குடும்பத்தாருக்குத் தெரிந்தே இருவரும் காதலிக்கிறார்கள். பெரியவர்களும் திருமணம் முடிக்க முடிவு செய்து நிச்சயம் செய்கிறார்கள்.
நிச்சயதார்த்தம் அன்று விமலின் பள்ளிப் பருவ காதல் தீபா ஷாவிற்குத் தெரியவர கோபமடைந்து நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விடுகிறார். எவ்வளவோ சொல்லியும் தீபா ஷா சமாதானமடையாததால் விமல் மீண்டும் வெளிநாடு செல்ல முடிவெடுத்து, போகும் வழியில் சென்னைக்குச் செல்கிறார். அங்கு எதிர்பாராமல் ஓவியாவை சந்திக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை.
வழக்கமான முக்கோணக் காதல் கதைதான் என்றாலும் நிறைவாக சொல்ல முடியாமல் பல இடங்களில் தடுமாறியிருக்கிறார் இயக்குனர். சீரியசான காதல் கதையில் மனோபாலா சம்பந்தப்பட்ட நகைச்சுவைக் காட்சிகள் சரியான ஸ்பீட் பிரேக்கர். அதிலும் அந்த எந்திரன் கெட் அப்…தாங்க முடியலை…ஏன் மனோபாலா ஸார்…நீங்க சாதாரணமா கமென்ட் அடிச்சாலே சிரிப்போமே…
விமல் பள்ளிக் கூட மாணவராகவும் (!?), ஃபாரீன் ரிட்டர்னாகவும் நடித்திருக்கிறார். எல்லா காட்சிகளிலும் ஒரே மாடுலேஷனிலேயே பேசுகிறார். எது காதல், எது சோகம், எது சந்தோஷம் என்றே தெரியவில்லை. அப்பாவித்தனமாக நடிங்க விமல்னு டைரக்டர் சொல்லியிருப்பார் போலிருக்கிறது. எங்களுக்கு ‘களவாணி’ டைப் விமல்தான் டபுள் ஓகே..
தீபாஷா , விமலின் காதலி. அழகாக இருக்கிறார். ஆனால் , நமக்கு பரிச்சயமான முகம் மாதிரி தோன்றவில்லை. விமலைக் காதல் பார்வை பார்க்கும் போதெல்லாம் ரசிக்க வைக்கிறார். மற்ற காட்சிகளில் ஒரே மாதிரிதான் நடிக்கிறார். நடிப்பில் இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.
விமலின் பள்ளிக் காதலியாக ஓவியா. அதன் பின் மெச்சூர்டான தோற்றத்திலும், நடிப்பிலும் ரசிக்க வைக்கிறார். இவரின் கதாபாத்திரம்தான் படத்தை தாங்கி நிற்கும் ஒன்று. அதை நிறைவாக செய்திருக்கிறார்.
நகைச்சுவைக்கு மனோபாலாவை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். அதிலும் இரு வேடம். ஒரு வேடத்திலாவது சிரிக்க வைத்திருக்கலாம்.
பைசல் இசையில் பாடல்கள் பார்க்கும் போது ஓரளவிற்கு பிடித்தாலும், வெளியில் வந்தால் ஞாபகப்படுத்த முடியவில்லை. ராஜேஷ் யாதவ், ஆரோ ஒளிப்பதிவு பளிச் ரகம். ஹீரோயின்களுக்கு ஸ்பெஷலாக லைட்டிங் செய்திருப்பார்கள் போல. அழகாகக் காட்டியிருக்கிறார்கள்.
சில்லுன்னு ஒரு சந்திப்பு – சந்திப்பு ஓகே. சில்லுன்னுதான் இல்லை.
