‘ரியலிட்டி ஷோ’ என்ற பெயரில் ஏற்கெனவே தொலைக்காட்சிகளில் பல நாடகத்தனங்கள் நடந்து கொண்டிருந்தாலும் இப்போது சினிமா பக்கமும் எட்டிப் பார்க்க ஆரம்பித்து விட்டது.
நேற்று வெளியிடப்பட்ட பாலாவின் ‘பரதேசி’ படத்தின் ரியலிட்டி டீசர் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
கையில் உள்ள கம்பால் நடிப்பவர்களை அடித்து நடிப்பையும், காட்சியின் தன்மையையும் அவர் சொல்லிக் கொடுக்கும் விதத்தைப் பார்க்கும் போது படத்தின் பப்ளிசிட்டிக்கான ஒரு டீசராக வெளியிட்டிருக்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
அதற்கு ‘ரியலிட்டி டீசர்’ என்று ஒரு புதிய பெயரை வைத்து இன்று பலரும் ‘ரியலிட்டி’ என்ற வார்த்தையை பேச ஆரம்பித்து விட்டார்கள்.
எமக்குத் தெரிந்த வரை ‘நடிப்பு என்பது தெரியாமல் நடிப்பதுதான் நடிப்பு’ என்றே சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் , இந்த டிரைலரைப் பார்க்கும் போது நடிப்புக்காக எப்படி ஒருவரை நடிக்க வைத்தோம் என்பதை ஒரு ‘நாடகத்தனமான’ டீசர் மூலம் வெளிப்படுத்துவது சரியா ? என்றே கேட்கத் தோன்றுகிறது.
பாலா ஒரு சிறந்த இயக்குனர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் , ஒரு படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு இப்படியெல்லாமா விளம்பரப்படுத்த வேண்டும் என்பதே நமது கேள்வி.
படத்தில் இருக்கும் எவ்வளவோ நல்ல காட்சிகளில் இருந்து சில காட்சிகளை தேர்வு டீசராக முன் வைக்கலாமே ?
இல்லை, இதில் என்ன தவறு என்று அவர் சொன்னால் அதற்கு ரசிகர்களும் சரியான தீர்ப்பைக் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
திரைப்படங்கள், தொலைக்காட்சிகளில் பயன்படுத்தும் ‘ரியலிட்டி’ என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் என்ன என்பதை அனுபவம் வாய்ந்த தொலைக்காட்சி நண்பர் ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியது, “ எதுவுமே எழுதப்படாத, நகைச்சுவையான விஷயங்களோ, அல்லது இயல்பாக நடக்கும் விஷயங்களோதான் ‘ரியலிட்டி’ என அழைக்கப்படும்.
உதாரணமாக , நாம் சாலைகளில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராமல் திடீரென நடக்கும் விபத்தை ஒரு காமிராவால் காட்சிப்படுத்தி காட்டுவது மட்டுமே ரியலிட்டி ஆகும். எந்த திட்டமிடலும் இல்லாமல் நடக்கும் விஷயங்களை காட்டுவதே ரியலிட்டி,” என்றார்.
அப்படியிருக்க ‘பரதேசி’ படத்திற்காக எழுதப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டு, சிலரால் நடிக்கப்பட்டு, அதை இயக்குனரான பாலாவே சிலாகித்து கடைசியில் ரசிப்பது போல் காட்டியிருப்பதை எப்படி ‘ரியலிட்டி’ டீசர் என்று சொல்ல முடியும்.
– கவி
http://youtu.be/cBgl4sOJPGM
