இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன் இயக்கி, இசையமைத்து, தயாரித்துள்ள ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ படத்தின் இசை வெளியீடு நடந்தது.
கவிஞர் வைரமுத்து இசையை வெளியிட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் பெற்றுக் கொண்டார்.
விழாவில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன், தயாரிப்பாளர்கள் தேனப்பன், டி. சிவா, படத்தின் நட்சத்திரங்கள் அபி, காயத்ரி, தீக்ஷிதா, அபிராமி மற்றும் பல திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இசையை வெளியிட்டு பேசிய கவிஞர் வைரமுத்து, பாடலாசிரியர்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் தான் என்று சொன்னார்.
மேலும் அவர் பேசுகையில், “ இந்த படத்தின் டைரக்டர் எஸ்.எஸ்.குமரன் என்னை வந்து சந்தித்து ஒரு நல்ல கதை இருக்கிறது என்றார். என்னிடம் வருகிற இயக்குனர்களிடம் மூன்று நிமிடத்தில் கதையை சொல்லுங்கள் என்பேன் நான். மூன்று நிமிடத்தில் சொல்ல முடியாத கதை நல்ல கதை இல்லை என்பது என் கருத்து. ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தின் கதை என்ன ? புற்றுநோய் வந்த மனைவியை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறான் கணவன். அந்த மருத்துவர் மனைவியின் முன்னாள் காதலன். இவ்வளவுதான் கதை.
இப்படி இராமாயணத்தை, மகாபாரதத்தை, சிலப்பதிகாரத்தை கூட இரண்டு மூன்று நிமிடங்களில் கதையாக சொல்லிவிடலாம். எஸ்.எஸ்.குமரனும் என்னிடம் அப்படிதான் இந்த படத்தின் கதையை சொன்னார். ஒரு தமிழன் கேரள பெண்ணைதான் மணமுடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கிளம்பி கேரளாவுக்கு செல்கிறான். அவ்வளவுதான் கதை. அதற்கப்புறம் அதை தேவைப்படுகிற அளவுக்கு விரிவாக்கிக் கொள்ளலாம். மெருகேற்றிக் கொள்ளலாம். சரி, நான் பாடல் எழுதுகிறேன் என்று கூறிவிட்டேன். அதற்கப்புறம் அவர் என்னிடம் கேட்டுக் கொண்டது மற்றொரு ஆச்சர்யமான விஷயத்தை. சார், எல்லா பாடல்களையும் நீங்களே எழுதிக் கொடுங்கள். அதற்கப்புறம் நான் மெட்டுப் போட்டுக் கொள்கிறேன் என்றார்.
இன்று திறமையான இசையமைப்பாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் தனக்கான வியாபாரத்தை தக்க வைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் பாடலாசிரியர்களின் நீண்ட நெடிய வரலாற்றை பார்த்தால் அவர்கள் யாரை விரும்புவார்கள் தெரியுமா? ஜி.ராமநாதனையா, எஸ்.வி.வெங்கட்ராமனையா, எம்.எஸ்.விஸ்வநாதனையா, இளையராஜாவையா, என்று கேட்டால் அவர்கள் விரும்புவது கே.வி.மகாதேவனைதான். அவர் ஒருவர் மட்டும்தான் நீங்கள் வார்த்தைகளை கொடுத்துவிட்டு வீட்டுக்கு போங்கள். நான் அதை பாடலாக்கிவிட்டு கூப்பிடுகிறேன் என்று சொன்னவர். இல்லையென்றால் ‘கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா, அதில் கட்டில் அமைந்ததடா’ என்ற வார்த்தைக்கு அவர் மெட்டு அமைத்திருக்க முடியாது.
எல்லா பாடல்களும் எழுதிக் கொடுத்துதான் மெட்டமைக்க வேண்டும் என்பது இல்லை. எல்லா மெட்டுகளும் அமைக்கப்பட்ட பின்புதான் பாடல் எழுதப்பட வேண்டும் என்பதும் இல்லை. தேவைப்படுகிறபோது கலந்து செய்தால் பாடலாசிரியர்களும் இசையமைப்பாளர்களும் தமிழ் மக்களுக்கு தங்கள் விருந்துகளை தனித்தனியாக படைக்கலாம்.
இந்த படத்திற்கு பாடல்களை எழுதிக் கொடுத்த பின்பு அதை பாடலாக்கி எனக்கு போட்டுக் காட்டினார் குமரன். எல்லா பாடல்களையும் மெட்டுப் போட்ட பின்புதான் எழுதிய மாதிரி அவ்வளவு அற்புதமாக வந்திருந்தது. நான் அவரை பாராட்டினேன். கொண்டாடினேன். இந்த நேரத்தில் நான் அவருக்கு சொல்லிக் கொள்வது இதுதான். இனிமேல் குமரன் பாட்டெழுத என்னிடம் கேட்டு வந்தால் எனது சம்பளத்தில் பாதியை குறைத்துக் கொள்கிறேன்,” என்றார்.