திரைப்படம் சம்பந்தமான விழாக்களுக்கு பெரும்பாலான நடிகைகள் வருவது கிடையாது.
அப்படி வராத நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது பற்றி பேசி முடிவு எடுக்கப்படும் என தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார் சில வாரங்களுக்கு முன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பெரும் தயாரிப்பாளர் ஒருவரே முன்னணி நடிகை மீது இது பற்றிய குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.
பி.ஜி. சுரேந்திரன் இயக்கத்தில் , பரணி இசையமைப்பில், புதுமுகம் அமல், சரண்யா மோகன் மற்றும் பலர் நடித்த ‘கோலகலம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் பேசிய ஸ்டுடியோ க்ரீன் – தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா, “இந்த படத்தின் நாயகியான சரண்யா மோகன் இந்த இசை வெளியிட்டு விழாவுக்கு வர மாட்டேன் என்று சொன்னார் என இயக்குனர் என்னிடம் தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்த எங்களது படத்தின் இசை வெளியீட்டு விழா ஒன்றிற்கும் படத்தின் நாயகி வரவில்லை. அவர் வரத் தயாராக இருந்தும் அவரது மேனேஜர் அவர் வருகையைத் தடுத்து விட்டார். இப்படி மேனேஜர்கள் நடந்து கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்கம் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ” என்றும் குற்றம் சாட்டினார்.
ஞானவேல் ராஜா சமீபத்தில் இசை வெளியீடு நடத்திய படம் ‘ஆல் அன் ஆல் அழகுராஜா’. அப்படத்தின் நாயகி காஜல் அகர்வால் என்பதை இங்கு குறிப்பிடுகிறோம்.
தயாரிப்பாளர் சங்கத்தில் செயலாளராக இருக்கும் ஞானவேல் ராஜாவே இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளது, பல முன்னணி ஹீரோயின்கள் தயாரிப்பாளர்களை மதிப்பதில்லை என்பதையே காட்டுகிறது.
பின்னர் பேசிய தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார், “விழாவுக்கு வராமல் இருப்பதை நடிகைகள் மாற்றிக் கொள்ள வேண்டும். அவர்கள் வந்தால்தான் மீடியாக்களும் முக்கியத்துவம் கொடுக்கின்றன. தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.
நீங்கள் ஒப்பந்தம் போடும் போதே அவர்களது சம்பளத்தில் 10 சதவீதத் தொகையை இசை வெளியீட்டு விழா முடிந்த பிறகும், படம் வெளியாகி மீடியாக்களுக்கு பேட்டி அளித்த பின்னர் மேலும 10 சதவீதத் தொகையைத் தருவதாகவும் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும். பல படங்களுக்கு நடிகைகள் டப்பிங் பேசாமல் போவதால், ஷுட்டிங் முடிந்த பிறகே, அவர்களது மொத்த சம்பளமும் கொடுக்கப்பட்டு விடுகிறது. அவர்கள் விழாக்களுக்கு வந்த பிறகும் தயாரிப்பாளர் மீதமுள்ள 20 சதவீதத் தொகையை தரவில்லையென்றால், அதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் பொறுப்பேற்றுக் கொள்ளும் ,” என்றார்.
தமிழ்நாட்டில் மட்டுமே தயாரிப்பாளர்கள் இப்படி கெஞ்சும் நிலை உள்ளது. ஆனால், ஆந்திராவில் எந்த படமாக இருந்தாலும் அந்த படத்தின் அனைத்து நட்சத்திரங்களும் கலந்து கொள்கிறார்கள்.
பட வெளியீட்டிற்குப் பின்னரும், அனைத்து தொலைக்காட்சி, இணையதள, பண்பலை ஊடகங்களுக்கும் பேட்டிகளை அளிக்கிறார்கள்.
தமிழ்த்திரையுலகில் இந்நிலை மாற தயாரிப்பாளர்கள் சங்கமும், நடிகர் சங்கமும் இணைந்து ஒரு முடிவெடுப்பார்களா என்பதே கேள்வி ?