விடியும் முன் – விமர்சனம்

மிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு முறைதான் குறிஞ்சிப்பூ பூத்தாற் போல் நல்ல படங்கள் வெளி வருகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெருமைபட்டு  சொல்லிக் கொள்ளும்படியான படம்தான் ‘விடியும் முன்’. இப்படிப்பட்ட கதையையெல்லாம் படமாக எடுக்க முடியுமா என்ற ஆச்சரியத்தை மேலும் ஆச்சரியப்படும் விதத்தில் திரைக்கதை அமைத்து ஒரு அற்புதமான படைப்பாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி கே.குமார். ஹீரோயிசம் இல்லை, குத்துப் பாட்டோ, டாஸ்மாக் பாட்டோ, என தற்போதைய தமிழ் சினிமாவின் தடங்கள் எதுவும் இல்லாத தரமான படம். பூஜா ஒரு விலைமாது. பிரமாதமாக தொழில் நடத்திக் கொண்டிருந்தவர், இப்போது மிகவும் சாதாரணமான விதத்தில் தொழில் செய்கிறார். அமரேந்திரன் ஒரு புரோக்கர். பெண்களை வைத்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர். ஒரு பிரபல புள்ளி 12 வயது பெண்ணைக் கேட்க அவருக்காக பூஜாவைக் கட்டாயப்படுத்தி, ஒரு 12 வயது பெண்ணை பூஜா மூலமே ஏற்பாடு செய்து அந்த பிரபல புள்ளியிடம் அனுப்பி வைக்கிறார். ஆனால், சென்ற இடத்தில் பூஜாவும் அந்த 12 வயது பெண்ணும் சேர்ந்து அந்த பிரபல புள்ளியைக் கொன்று விடுகிறார்கள். அதன் பின் இருவரும் தப்பித்து விடுகிறார்கள்.  இவர்களை அந்த பிரபல புள்ளியின் மகன், அமரேந்திரன், 12 வயது பெண்ணை ஏற்பாடு செய்து கொடுத்த ஒரு தாதா ஆகிய மூவரும் தேடுகிறார்கள். அவர்கள் கையில் பூஜாவும் அந்த 12 வயது பெண்ணும் சிக்கினார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. ‘நான் கடவுள்’ படத்திற்குப் பிறகு நீண்ட  இடைவெளிக்குப் பின் நடிக்க வந்திருக்கிறார் பூஜா. என்னதான் கேவலமான தொழில் செய்தாலும் அவருக்குள்ளும் ஒரு ஈரம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தக் கூடிய ஒரு கதாபாத்திரம். அந்த சிறுமியைக் காப்பாற்றத் துடிப்பதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றுமே அவர் மீது நமக்கு பரிதாபத்தையும், அனுதாபத்தையும் ஏற்படுத்துவதே அவரது கதாபாத்திரத்திற்கும், நடிப்பிற்கும் கிடைத்துள்ள வெற்றி. 12 வயது சிறுமியாக மாளவிகா மணிகுட்டன். வயதுக்கு மீறிய பேச்சுடனும் கேள்விகளுடனும் ரசிக்க வைக்கிறார். அந்த வயதில் இந்த கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்கிக் கொண்டு நடிப்பது சாதாரண விஷயமல்ல. அதை அருமையாகவே செய்திருக்கிறார். ‘பிளாக்மெயில்’ செய்து பிழைப்பு நடத்தும் ஜான் விஜய், பணத்திற்காக அமரேந்திரனுடன் சேர்ந்து பூஜாவைத் தேடுகிறார். அதிகமான வில்லத்தனம் இல்லையென்றாலும் வித்தியாசமான கதாபாத்திரம். பார்வைகளாலும், நறுக்கென்ற பேச்சுக்களாலும் ரசிக்க வைக்கிறார். யார் அந்த அமரேந்திரன். இத்தனை நாட்களாக எங்கிருந்தார். அவரது தோற்றமும், நடை, உடை, பாவனையும் ‘புரோக்கர்’ கதாபாத்திரத்தில் பிரமிக்க வைக்கின்றன. தமிழ் சினிமாவிற்குக் கிடைத்துள்ள அருமையான குணச்சித்திர நடிகர். பிரபல புள்ளியின் மகனாக வினோத் கிஷன், அதிகம் பேசாமலேயே வில்லனோ என நினைக்க வைத்து கிளைமாக்சில் இவரது கேரக்டரில் பெரிய ட்விஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர். பூஜாவுக்கு ஆதரவளிக்கும் கதாபாத்திரத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன். பூஜாவைப் பார்த்து பார்வையாலேயே கேட்கும் ஒரு கேள்வி போதும், இவருடைய நடிப்பைப் பற்றி சொல்ல… கிரீஷ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை அருமை. காட்சிகளின் தாக்கத்தை அவரது இசை மூலம் மேலும் ரசிக்க வைக்கிறார். சிவகுமார விஜயன் ஒளிப்பதிவு, கதையை மீறி வேறு எங்கும் பயணிக்காமல் இயல்பாக ரசிக்க வைக்கிறது. மொத்தத்தில் நிஜமாகவே ஒரு வித்தியாசமான முயற்சி. கை கொடுங்கள் பாலாஜி கே. குமார். வியாபார ரீதியாக படம் பெரிய அளவில் போனாலும் போகாவிட்டாலும், தமிழ் சினிமா உள்ளவரை ஒரு சிறந்த படத்தைக் கொடுத்ததற்காக நீங்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம். விடியும் முன் – தமிழ் சினிமாவிற்கு ஒரு விடியல்…   தயாரிப்பு – கயும் ஸ்டுடியோஸ் – ஜாவித் கயும் திரைக்கதை, வசனம், இயக்கம் – பாலாஜி கே. குமார் இசை – கிரீஷ் கோபாலகிருஷ்ணன் ஒளிப்பதிவு – சிவகுமார் விஜயன் படத்தொகுப்பு – சத்தியராஜ் சண்டைப் பயிற்சி – தளபதி தினேஷ் கலை – எட்வர்ட் கலைமணி நடனம் – ராம்ஜி VFX – மாயா பஜார் ஸ்டுடியோஸ் லைன் புரொடியூசர் – எஸ். பிரபாகரன் நிர்வாகத் தயாரிப்பு – நீத்து சி. க்ரிபலானி மக்கள் தொடர்பு – நிகில் நடிப்பு – பூஜா உமாஷங்கர், மாளவிகா மணிகுட்டன், வினோத் கிஷன், ஜான் விஜய், அமரேந்திரன், முத்துக்குமார், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் பலர். வெளியான தேதி – 29 நவம்பர் 2013

Read Previous

வடிவேலுவின் ‘தெனாலிராமன்’ பொங்கல் ரிலீஸ்…?

Read Next

நவீன சரஸ்வதி சபதம் – விமர்சனம்

Most Popular