தமிழ் சினிமாவில் காலம் காலமாக இருந்து வரும் அண்ணன் – தங்கச்சி சென்டிமென்ட்தான் படத்தின் கதை. புதுமுக நாயகன் நடித்த, சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் அப்படி எதுவும் தெரியாத அளவிற்கு ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஸ்ரீபாலாஜி, லீமா அண்ணன் தங்கை. அம்மா இறந்து விட, அப்பாவின் ஆதரவு இல்லாமல் தங்கையை கண்ணும் கருத்துமாகப் பார்த்து வருகிறார் ஸ்ரீபாலாஜி. ஆனால், தங்கை வயதுக்கு வந்த பின் அவருக்கு பயம் வந்துவிடுகிறது. அதனால் தங்கை லீமாவை எங்குமே தனியாக அனுப்புவதில்லை. இதனிடையே, தங்கை லீமா கர்ப்பமாக இருக்கிறார் என டாக்டர் சொல்ல அதிர்ச்சியடைகிறார். அதற்குக் காரணம் தனது நண்பன் ஒருவன்தான் என நினைக்கிறார். அதற்கேற்றபடி பாலாஜியின் நண்பனும் காணாமல் போகிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. புதுமுகம் ஸ்ரீபாலாஜி, எப்போதும் கோபத்துடன் ஆவசேமாகவே இருக்கிறார். தங்கை மீது அளவுக்கதிகமான பாசம் வைத்திருப்பவருக்கு, அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிந்ததும் அந்த ஆவேசம் இன்னும் அதிகமாகிறது. அதன் பின் அவர் எடுக்கும் முடிவுகள் ஒவ்வொன்றும் அதிடியாகவே இருக்கிறது. நடிப்பில் புதுமுகம் என்று சொல்ல முடியாதபடி நடித்திருக்கிறார். ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ படத்தின் நாயகிகளுள் ஒருவரான காயத்ரிதான் இந்த படத்தின் நாயகி. பாவாடை, தாவணியில் அம்சமாக இருக்கிறார். ஆனால், இவருக்கு அளவான காட்சிகளே தந்திருக்கிறார் இயக்குனர். அண்ணன் , தங்கை சென்டிமென்ட்தான் படத்தின் மையக் கரு என்பதால் தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ள லீமாவுக்குத்தான் கதாநாயகிக்குரிய முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும், கிளைமாக்சில் லீமாவின் கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள முடிவு எதிர்பாராதது, தேவையற்றது. அதிகமான நகைச்சுவை இல்லாமல் படம் சீரியசாகவே நகர்கிறது, கிராமத்துக் கதை என்பதால் இடைவேளை வரை ஆங்காங்கே நகைச்சுவைக் காட்சிகளை வைத்து, அதன் பின் படத்தை சீரியசாக நகர்த்தியிருக்கலாம். சூறையாடல் – ஆவேசம் அதிகம்…