இந்தியில் கங்கணா ரணவத் நடித்து வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ‘குயின்’ திரைப்படத்தை நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கியிருக்கிறார்.
இந்த உரிமையைப் பெற பலத்த போட்டி நிலவி வந்த நிலையில் தியாகராஜன் அதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்போது ‘குயின்’ படத்தின் ரீமேக்கை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் இயக்கவும், நாயகியாக நடிக்கவும் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.
‘குயின்’ படத்தின் மையக் கருத்து பெண்களுக்கு ஒரு முன்னோடியாகவும், உதாரண படமாகவும் இருக்கும். பல இன்னல்களில் சிக்கித் தவிக்கும் அப்பாவி பெண்கள், துயரத்திலிருந்து தங்களை மீட்டு, வாழ்க்கையின் இடர்ப்பாடுகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை நகைச்சுவை கலந்து ரசனையோடு தயாரிக்கப்பட்ட படம்தான் ‘குயின்’.
தென்னிந்திய மொழிகளில் ‘ராணி’ என்ற பெயரில் இப்படம் தயாராக உள்ளது. இதற்கான இயக்குனர், கதாநாயகி மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. முன்னணி கதாநாயகிகள் பலரும் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்து உள்ளார்கள். நான்கு மொழிகளிலும் யார் யார் ‘ராணி’ ஆகப் போகிறார்கள் என்பது விரைவில் தெரிந்துவிடும்.
குறுகிய கால தயாரிப்பாக தயாராக உள்ள ‘ராணி’ படத்திற்கான கதாநாயகி தேர்வு செய்யப்பட்ட பின், ‘குயின்’ படத்தின் கதாநாயகியான கங்னா ரணவத் கிரீடம் அணிவித்து ராணியாக அறிவிக்க உள்ளார். இதற்கான பிரம்மாண்ட விழா விரைவில் நடைபெற உள்ளது.
‘ராணி’ படத்தின் படப்பிடிப்பு இந்தியா, பாரீஸ், ஆம்ஸ்டார்டாம், ஸ்பெயின் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
ஏராளமான பொருட்செலவில் படத்தைத் தயாரிக்க உள்ளதாக தனது பிறந்த நாளான ஜுன் 21ம் தேதியன்று தயாரிப்பாளர் தியாகராஜன் அறிவித்துள்ளார்.