‘சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா’…நாம் விசாரித்த செய்தியைப் பற்றிக் கேட்ட போது காதில் விழுந்த டயலாக்தான் அது…
‘ஒரே ஒரு பாடல் ஓஹோன்னு வாழ்க்கை’ என்பது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, இசையைமப்பாளர் அனிருத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ‘3’ படத்தில் அவர் இசையமைத்த ‘கொலை வெறி’ பாடல் புகழால், குறுகிய காலத்திலேயே அவரது சமகால இசையமைப்பாளர்களை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்துவிட்டார்.
தனுஷ், சிவகார்த்திகேயன் இருவரது படங்களுக்கும் தனி கவனத்துடன் இசையமைத்தவர் இப்போது வளர்த்து விட்டவர்களுக்கே ‘இதோ..அதோ..’ என டபாய்க்க ஆரம்பித்து விட்டாராம். விஷயம் இதுதான்…
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் ‘கத்தி’ படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருப்பது அனிருத். என்னதான் தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றோருக்கு இசையமைத்தாலும் விஜய் நடிக்கும் படம், அதுவும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்திற்கு இசையமைப்பது என்றால் சும்மாவா.
தனுஷ், தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாணா’ படத்திற்கென சிறப்பான பாடல்களை இசையமைத்து வைத்திருந்தாராம். ஒரு சந்தர்ப்பத்தில் அந்தப் பாடலை ஏ.ஆர். முருகதாசுக்குப் போட்டுக் காட்டியிருக்கிறார் அனிருத். அந்த டியூன்களைக் கேட்ட முருகதாஸ், விஷயத்தை அப்படியே விஜய் காதுகளுக்குக் கொண்டு போயிருக்கிறார். விஜய்யும் டியூன்களைக் கேட்டு பாராட்டித் தள்ள, அவற்றை அப்படியே ‘கத்தி’ படத்திற்கு கொடுங்களேன் எனக் கேட்டிருக்கிறார்.
அவ்வளவு பெரிய நடிகர் கேட்கும் போது எப்படி மாட்டேன் எனச் சொல்வது என முதலில் தயங்கிய அனிருத் அதன் பின் அந்த டியூன்களை அப்படியே ‘கத்தி’க்கு கடத்தி விட்டிருக்கிறார். ‘கத்தி’ படத்தின் பாடல்கள் அவ்வளவு சூப்பராக இருக்கிறதாம். சாரி..டாணாவுக்காக போட்ட பாடல்கள் ‘கத்தி’க்கு பொருத்தமாக அமைந்து விட்டதாம்.
‘டாணா’ குழுவினர் இப்போது படப்பிடிப்பை முடித்து விட்டு, அனிருத் தரப் போகும் பாடல்களுக்காக காத்திருக்கிறார்களாம். ‘கத்தி’யை கொஞ்சம் கொஞ்சமா சொருக ஆரம்பிச்சிடுவாங்களோ….?