‘கத்தி’ எதிர்ப்பு விவகாரம்…தலைவர்களை சந்திக்கும் படக்குழு…

vijay in kaththiஇலங்கைத் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் ‘லைக்கா’ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘கத்தி’ படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா மற்றும் பலர் நடிக்க இந்தப் படம் ஆரம்பமான போதே சர்ச்சையைக் கிளப்பியது. தொடர்ந்து பல எதிர்ப்புக் குரல்கள் எழுந்தாலும், அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் படப்பிடிப்பை முக்கால்வாசி நடத்தி முடித்து விட்டார்கள். தற்போது பல மாணவர் அமைப்புகள் படத்திற்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்ததும்தான் ‘கத்தி’ படக்குழு கொஞ்சம் சுதாரித்துக் கொண்டது.

உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்கள் படத்தைத எதிர்க்க ஆரம்பித்தால் வெளிநாட்டு வியாபாரமும் கெட்டு விடும், உள்ளூரிலும் எதிர்ப்பு ஆரம்பமானால் எங்கே ‘தலைவா’ படத்திற்கு ஆன கதி இந்தப் படத்திற்கும் ஆகிவிடுமோ என தாமதமாக உணர்ந்த படக் குழுவினர் தற்போது சில தலைவர்களை சந்தித்து அவர்களது விளக்கங்களை கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.

நேற்று படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான கருணாவுடன் படத்தின் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் நெடுமாறன், சீமான், திருமாவளவன் ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார்கள். அடுத்ததாக வைகோவுடனும் பேசப் போவதாக முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர்கள் சந்திக்கும் தலைவர்கள் பட்டியல் அவ்வளவுதானா அல்லது இன்னும் இருக்குமா என்பது இனிமேல்தான் தெரிய வரும். அனைத்துத் தலைவர்களையும் சந்தித்து படத்தை எப்படியாவது வெளியிட்டுவிட வேண்டும் என்பதில் மட்டும் படக் குழுவினர் தீவிரமாக இருக்கிறார்களாம்.

‘தலைவா’ படப்பிரச்சனை, ‘சூப்பர் ஸ்டார்’ பிரச்சனை தற்போது ‘கத்தி’ பிரச்சனை என எந்த நேரத்தில் தான் நடிக்கும் படத்திற்கு ‘கத்தி’ என விஜய் பெயர் வைத்தாரோ அவருடைய திரையுலக வாழ்க்கையில் தலைக்கு மேல் ‘கத்தி’ எப்போதுமே தொங்கிக் கொண்டேயிருப்பது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது.

‘கத்தி’ எதிர்ப்பு விவகாரம், சத்தமாக வெளி வருமா அல்லது சத்தமில்லாமல் அடங்கிப் போகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read Previous

சிவகார்த்திகேயன் பட டியூன்களை எடுத்துக் கொண்ட விஜய்…??

Read Next

Mirchi Music Awards 2013…