அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் மற்றும் பலர் நடிக்க கௌதம் மேனன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் சாய்ராம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தின் தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.‘
சற்று முன் இப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். படத்திற்கு ‘என்னை அறிந்தால்…’ என பெயரிட்டுள்ளார்கள்.
படத்தின் டைட்டிலைப் பார்க்கும் போது இது முற்றிலும் கௌதம் மேனன் ஸ்டைல் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. படத்தில் இள வயது, நடுத்தர வயது ஆகிய தோற்றங்களில் அஜித் நடித்து வருகிறார்.
“ஆரம்பம், வீரம்’’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு ஆரம்பமாகி பல நாட்களுக்குப் பிறகுதான் படத்தின் தலைப்பையே அறிவித்தார்கள். அது போலவே இந்தப் புதிய படத்தின் தலைப்பும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தின் போஸ்டர் டிசைனை இன்று நண்பகல் வெளியிட உள்ளார்களாம். தீபாவளி அன்றே படத்தின் தலைப்பு வெளியாகும் என சொல்லப்பட்டது.
அஜித் ரசிகர்கள் இந்தப் படத்தை ‘தல 55’ என்றே இதுநாள் வரை அழைத்து வந்தனர். படத்தின் டைட்டில் ‘என்னை அறிந்தால்’ என வெளியான உடனேயே டிவிட்டரில் அஜித் ரசிகர்கள் இந்திய அளவில் படத்தின் பெயரை டிரெண்டில் கொண்டு வந்து விட்டனர்.