ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியீட்டில், பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் அரோல் கொரேலி இசையமைப்பில் புதுமுகங்கள் நாகா, பிரயாகா, ராதாரவி மற்றும் பலர் நடித்து கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் ‘பிசாசு’.
மிஷ்கின் அவருடைய வழக்கமான கதை பாணியிலிருந்து விலகி, அதே சமயம் அவருடைய திரைப்பட ஆக்கத்திலிருந்து சிறிதும் விலகாமல் கொஞ்சம் நகைச்சுவை உணர்வுடன் ஒரு பிசாசுவின் உணர்வுகளை வெளிப்படுத்திய இந்தப் படம் தமிழ்நாடு முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
படம் வெளியான இரண்டு நாட்களில் மாநகரங்களில் மட்டும் படத்தின் வசூல் நன்றாக இருப்பதாக ஒரு தகவல் பரவியது. ஆனால், இணையதளங்கள், பத்திரிகைகள் மற்றும் சமூக வலைத்தள செய்திகள், வாய் வழிப் பேச்சு ஆகியவற்றால் தற்போது இந்தப் படம் தமிழ்நாடு முழுவதும் வெளியான 200 திரையரங்குகளுக்கும் மேல் வசூலை வாரிக் குவித்து வருவதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இதற்கு முன் வாங்கி வெளியிட்ட ‘அரண்மனை’ படமும் இந்தத ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததைப் போலவே தற்போது ‘பிசாசு’ படமும் அமைந்துவிட்டது.
மிஷ்கின் இதற்கு முன் இயக்கிய ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படம் வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அந்தப் படம் விமர்சன ரீதியாக வெகுவாகப் பாராட்டப்பட்டது. அந்தப் படத்தைப் பார்த்ததுமே இயக்குனர் பாலா, மிஷ்கினை அழைத்துப் பாராட்டி, அத்துடன் நிற்காமல் ‘பிசாசு’ படத்தை இயக்கவும் வாய்ப்பைக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு ‘பிசாசு’வின் பெரிய மனதைக் காட்டிய இந்தப் படம் ரசிகர்களின் மனங்களிலும் இடம் பிடித்து விட்டது.