ஒரு திரைப்படம் சென்சார் சான்றிதழ் பெற்று வெளிவரத் தயாரான பின் அந்தப் படத்தை வெளியிட சில அரசியல் தலைவர்கள் அந்தப் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ‘கொம்பன்’ படத்திற்கு எதிராக தற்போது எழுந்த பிரச்சனைக்கு அனைத்து திரையுலக அமைப்புகளும் ஒன்று திரண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.
இன்று மாலை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக, அதன் தலைவர் தாணு மற்ற நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பாக தலைவர் விக்ரமன் மற்ற நிர்வாகிகள், நடிகர் சங்கம் சார்பாக தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி, ஃபெப்சி சார்பாக தலைவர் டி.சிவா உள்ளிட்டோர் அடங்கிய திரைப்பட கூட்டமைப்பினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
ஒரு படத்திற்கு சென்சார் சான்றிதழ் பெற்ற பிறகு அந்தப் படத்தை வெளியிட சிலர் முயற்சிப்பதை அவர்கள் வன்மையாகக் கண்டித்தனர்.
‘‘கொம்பன்’ படம் முற்றிலும் குடும்பப் பின்னணியில் ஒரு மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையிலான பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. படத்தை இயக்குனர் முத்தையா அவ்வளவு சிறப்பாக இயக்கியிருக்கிறார். அவருக்கு உடனே ஒரு படத்தை இயக்க வாய்ப்பு கொடுக்கும் அளவிற்கு படத்தை அற்புதமாகக் கொடுத்திருக்கிறார். எனக்கு இன்னொரு ‘கிழக்கு சீமையிலே’ படம் பார்த்த திருப்தி ஏற்பட்டது,” என்று தயாரிப்பாளர் தாணு தெரிவித்தார்.
“இந்தப் படத்தில் எந்த இடத்திலும் ஒரு சாதியப் பற்றிய பெயரோ, அல்லது இரு சாதிக்கு இடையிலான பிரச்சனையோ என்று எதையுமே குறிப்பிட்டுக் காட்டவில்லை. இரு ஊர்களில் வசிக்கும் மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையிலான விஷயத்தை மிகவும் அழகாக இயக்குனர் காட்டியிருக்கிறார். படத்தில் கார்த்தி அவ்வளவு அற்புதமாக நடித்திருக்கிறார். படம் பார்த்த பின் அவரை மிகவும் பாராட்டினேன். இந்தப் படத்தில் ஏதாவது சாதி விஷயங்கள் குறிப்பிட்டிருப்பதாக யாராவது சொன்னால், நான் படம் இயக்குவதையே விட்டு விடுகிறேன்,” என உணர்ச்சி பொங்க பேசினார் இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன்.
“ஒரு தனிப்பட்ட நபரோ, இயக்கமோ சென்சார் சான்றிதழ் பெற்ற ஒரு படத்தை வெளியிடுவதை எதிர்ப்பதை தடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவோம். எதிர் காலத்தில் இந்த மாதிரியான விஷயங்கள் நடப்பதை சட்ட ரீதியாகவும் எடுத்துச் செல்வோம். இனி இந்த மாதிரி எந்த விஷயம் நடந்தாலும் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்களது ஒற்றுமையை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவோம்,” என நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் ‘கொம்பன்’ படத் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, “இன்று காலை நீதிமன்ற அறிவுறுத்தலின்படி படத்தைப் பார்க்க வந்த ஓய்வு பெற்ற நீதிபதிகளைப் படம் பார்க்க விடாமல், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, முயற்சித்ததைப் பற்றியும், இந்த இடைஞ்சல்களால் படம் பார்க்க வந்த நீதிபதிகள் படம் பார்க்காமல் எழுந்து சென்றதைப் பற்றியும்,” விளக்கமாக எடுத்துரைத்தார்.
படத்தின் இயக்குனர் முத்தையா, நாயகன் கார்த்தி, ஆகியோரும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
ஏப்ரல் 2ம் தேதி வெளிவருவதாக இருந்த ‘கொம்பன்’ திரைப்படத்தை ஒரு நாள் முன்னதாக நாளை, அதாவது ஏப்ரல் 1ம் தேதியே வெளியிடுகின்றனர்.