பல படங்களுக்கு ஸ்டன்ட் காட்சிகளை அமைத்த ஸ்டன்ட் இயக்குனரான ‘ஸ்டன்’ சிவா, இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘கராத்தேகாரன்’.
இந்தப் படத்தை அவருடைய மனைவியான லானி ஹு தயாரிக்க, அவருடைய மகன்கள் கெவின், ஸ்டீவன் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். லானி ஹுவும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். மற்றும் நந்தா பெரியசாமி, ரோகிணி, அந்தோணிதாசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் உட்பட பல இசையைமப்பாளர்களிடம் கிடாரிஸ்ட்டாகப் பணியாற்றி கெபா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஜாக்கி சான் நடித்த ‘கராத்தே கிட்’ படத்தைப் பார்த்த போதுதான் இம்மாதிரியான ஒரு படத்தை தமிழில் எடுக்கலாம் என்ற திட்டம் ஸ்டன் சிவாவுக்கும், அவர் மனைவி லானிக்கும் வந்ததாம். உடனே, அதே மாதிரியான ஒரு கதையை எழுதும்படி மனைவி லானியிடம் கேட்டிருக்கிறார். ஆனால், படத்தில் சிறுவனாக நடிக்கும் கதாபாத்திரத்தை மட்டும் ஏழையாக வைக்கும்படி கேட்டுக் கொண்டாராம்.
அப்போதே இந்தப் படத்தின் கதையை எழுத ஆரம்பித்துவிட்டேன் என்கிறார் லானி. கராத்தேயில் பிளாக்பெல்ட் வாங்கியுள்ள இவர் தன்னுடைய மகன் 7 வயது இருக்கும் போதே காலை அனாயாசமாக தூக்கி நிறுத்துவான், அதைப் பார்த்ததும் தன் மகனுக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியையும் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
இங்கும் அனைவரும் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் கராத்தே வீராங்கனையான லானி ஹு.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.