யு டிவி மோஷன் பிக்சர்ஸ் சித்தார்த் ராய் கபூர் தயாரிப்பில் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிக்கும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ திரைப்படம் முடிவடைய உள்ளது.
தனது முதல் படமான ‘இயற்கை’ மூலம் தேசிய அங்கீகாரத்தைப் பெற்ற இயக்குனர் ஜனநாதன் அவரது அடுத்த படங்களான ‘ஈ’ மற்றும் ‘பேராண்மை’ ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இப்போது தன் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரசனையான படம் ஒன்றைத் தர உள்ளார்.
ஒளிப்பதிவாளர் NK ஏகாம்பரம் ஒளிப்பதிவில், செல்வ குமார் கலை இயக்கத்தில், கணேஷ் குமார் படத்தொகுப்பில், அறிமுக இசையமைப்பாளர் வர்ஷன் இசையைமப்பில், மிராக்கல் மைக்கல் சண்டைப் பயிற்சிகளுடன் இப்படம் தயாராகி வருகீறது.
படம் பற்றி இயக்குனர் ஜனநாதன் கூறியதாவது,
‘புறம்போக்கு’என்ற தலைப்பே மிகவும் வித்தியாசமான அர்த்ததைக் கொண்டது. ‘புறம்போக்கு’ என்ற சொல் தமிழில், வழக்கத்தில் கொச்சையாக பயன் படுத்தப்பட்டாலும், இது ஆழமான, அர்த்தம் கொண்ட, வரலாற்று ரீதியாக தமிழர்களின் வாழ்வியலோடு சேர்ந்த சொல்லாகும்.
புறம்போக்கு நிலம் யாருக்கும் சொந்தமானது அல்ல, மக்களுக்குப் பொதுவானது. மக்கள் தாங்கள் வசிக்கும் ஊரில் குடியிருப்புப் பகுதியைத் தவிர்த்து பொது தேவைக்கு நிலங்களை, ஏரி புறம்போக்கு, சுடுகாடு புறம்போக்கு, ஆற்றுப் புறம்போக்கு, மந்தைவெளி புறம்போக்கு, என்று பொது நிலங்களை பதினைந்து வகைகளுக்கும் மேல் பிரித்து வாழ்ந்தனர். மேலும், மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப குடியிருப்புகளை கட்டிக் கொள்வதற்கு நத்தம் புறம்போக்கு நிலங்களையும் விட்டு வைத்தனர்.
இதற்கு மேல் ஊர் பொதுவான சாலைகளுக்கும், பஸ் நிறுத்தம், பள்ளிகூடம், மருத்துவனை கட்ட அரசு புறம்போக்கு நிலங்களும் இதில் அடக்கம். மலைகளும், பனி சிகரங்களும், துருவங்களும், சர்வதேச கடல் பரப்பும் புறம்போக்கே. காற்றும், ஒளியும், நிலவொளியும், சிகரங்களும் எல்லையற்ற அண்டவெளியும் புறம்போக்கே. எதுவும் தனியுடமை அல்ல, பொதுவுடமை தான்.
குழம்பிப் போன இந்த காலகட்டத்தில் பொதுவுடமைக் கருத்தை மறுபடியும் மறுபடியும் வலியுறுத்தவே ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ என்று தலைப்பு வைக்கப்பட்டது,” என்கிறார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்.
‘ஏப்ரல் மாதத்தில் இசையையும், தொடர்ந்து மே 1 ஆம் தேதி படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ என்ற தலைப்பு மக்களுக்கு பிடித்திருப்பதும், சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருவதும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்று கூறுகிறார் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் இணை தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன்.