ஸ்பைடர் விமர்சனம்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி இளம் கதாநாயகனான மகேஷ் பாபு தமிழில் அறிமுகமாகிறார் என்ற அறிவிப்பு வந்ததுமே ‘ஸ்பைடர்’ படம் மீதான அறிவிப்பு ஆரம்பமானது. அது நாளுக்கு நாள் அதிகரித்து பட வெளியீட்டு வரை இருந்தது.

தமிழ், தெலுங்கில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இரு மொழி ரசிகர்களையும் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி முழுமையாக திருப்திப்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய வெற்றிப் படங்களில் ரமணா, கஜினி, துப்பாக்கி ஆகிய படங்களுடன் இந்தப் படத்தை சேர்க்க முடியாது. ‘கத்தி’ படத்திற்கு அடுத்த இடத்தை வேண்டுமானால் கொடுக்கலாம்.

புலனாய்வுத் துறையில் மக்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்கும் குழுவில் திறமைசாலியாக இருக்கிறார் மகேஷ் பாபு. அவர் கண்டுபிடித்த சாப்ட்வேர் மூலம் உதவி என்று கேட்பவர்கள் கண்டறியப்பட்டு அவரால் உதவியைப் பெறுகிறார்கள். ஒரு முறை அப்படி ஒட்டு கேட்கும் போது ஒரு பெண்ணின் உதவிக்காக, அவருடைய தோழி பெண் கான்ஸ்டபிள் ஒருவரை அனுப்புகிறார். ஆனால், அவர்கள் இருவருமே கொல்லப்படுகிறார்கள். அதோடு அவர்கள் உடல்களையும் துண்டு துண்டாக வெட்டி போட்டிருக்கிறார்கள். அந்தக் கொலைகளுக்குக் காரணமாக இருப்பவர்கள் யார் என்பதை தேடும் வேலையில் இறங்குகிறார். அந்த கொலைகாரனை மகேஷ் பாபு எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் விறுவிறுப்பான மீதிக் கதை.

மகேஷ் பாபுவின் ஸ்டைலுக்கேற்ப படத்தினை அவ்வளவு ஸ்டைலிஷாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் முருகதாஸ். அலட்டல் இல்லாத அதே சமயம் அழுத்தமான மகேஷ் பாபுவின் நடிப்பு தமிழ் ரசிகர்களுக்குத் தாராளமாகவே பிடித்திருக்கிறது. ஆனால், மகேஷ் பாபுவின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளை அதிகம் எதிர்பார்க்கும் தெலுங்கு ரசிகர்களுக்கு அது அதிகம் பிடிக்க வாய்ப்பில்லை. படத்தில் மகேஷ் பாபுவின் கை அதிகம் பேசுவதை விட அவருடைய மூளைதான் அதிகம் பேசுகிறது. வில்லனை பிடிக்க அவர் தீட்டும் திட்டங்கள் கொஞ்சம் சினிமாத்தனமாக இருந்தாலும் சுவாரசியமாக இருக்கிறது.

ஒரு நாயகனுக்கு சரியான வில்லன் அமைந்தால்தான் நாயகனின் ஹீரோயிசமும் அதிகம் வெளிப்படும். அந்த விதத்தில் மகேஷ் பாபுக்கு சரியான வில்லனாக அமைந்திருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. அவருடைய பார்வையும், விஷமப் புன்னகையும் அவருடைய ‘சுடலை’ கதாபாத்திரத்தில் சூப்பர் என்று சொல்ல வைக்கிறது.

தமிழ் சினிமாவில் வழக்கமாக வரும் லூசுத்தனமான கதாபாத்திரம் கொண்ட நாயகியாக ரகுல் ப்ரீத் சிங். டாக்டருக்குப் படிக்கிறவர் என்றாலும் ‘அந்த’ விஷயத்துக்காக ஆசைப்படுகிறார் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். ஆனாலும், நல்ல கதாபாத்திரம் வரும் காலத்தில் கிடைத்தால் தமிழில் முன்னணிக்கு வருவார் என்று மட்டும் தெரிகிறது.

பரத் கொஞ்ச நேரமே வந்தாலும் நினைவில் நிற்கிறார். மகேஷ் பாபுவின் நண்பனாக ஆர்.ஜே. பாலாஜி, ஒரு முறை கூட சிரிக்க வைக்கவில்லை.

பிளாஷ் பேக்கில் எஸ்.ஜே. சூர்யாவின் சிறு வயது பையனாக நடித்திருக்கும் அந்த சிறுவன்…அப்ப்ப்ப்……..பா…அவனது சிரிப்பில்தான் என்ன ஒரு குரூரம்.

சூர்யாவைத் தேடி அப்படி அலையும் மகேஷ் பாபு அவர் உயிருக்குப் போராடும் போது கூட சூர்யாவைக் குறி பார்த்து சுடுகிறார். அப்புறம் மாட்டிக் கொண்ட சூர்யா அவ்வளவு பாதுகாப்பிலிருந்து தப்பிக்கிறார். அதன் பின் நீளும் கதை தேவையில்லை என்றாலும் அந்த இடியும் கட்டிடத்தில் நடக்கும் சண்டைக் காட்சிகள் தியேட்டரில் கைதட்டலை அள்ளுகின்றன.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் வழக்கமான மெட்டுக்களில் பாடல்கள். படத்தின் விறுவிறுப்பைக் கூட்டாத பின்னணி இசை. பல காட்சிகளில் என்னமோ ஏதோ என்று வாசித்திருக்கிறார் என்ற உணர்வு.

கொஞ்சம் சினிமாத்தனமான காட்சிகளை தவிர்த்துப் பார்த்தால் ‘ஸ்பைடர்’ படத்தை தாராளமாக ரசிக்கலாம்.

Read Previous

பாஸ்கர் ஒரு ராஸ்கல் – டீசர்

Read Next

டி. ராஜேந்தருக்கு நடிகர் சங்கத் தலைவர் விஷால் கண்டனம்