சண்டக்காரி – விமர்சனம்

கோபக்கார பெண்ணுக்கும், பொறுமையாக தனது வாழ்க்கையை நகர்த்தும் இளைஞருக்கும் இடையே உருவாகும் உறவு, அதில் இருக்கும் சுவாரஸ்யமான திருப்பங்கள் என காதல் மற்றும் காமெடியை கலந்து சொல்ல முயற்சித்திருக்கும் திரைப்படம் ‘சண்டக்காரி’.

லண்டன் முதல் தமிழக கிராமம் வரை கதை பயணிப்பதோடு, கதாநாயகியின் தொழில் சார்ந்த பிரச்சனையையும், அதற்காக அவர் மேற்கொள்ளும் திருமண நாடகத்தையும் மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருக்கும் ஸ்ரேயாவுக்கு உதவியாளராக விமல் வேலைக்கு சேருகிறார். பொறியியல் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றவராக இருந்தாலும், தான் உருவாக்கிய செயலியை நிறுவனத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்ரேயாவிடம் உதவியாளராக பணியாற்றுகிறார். ஆனால், சிறிய விஷயங்களுக்குக் கூட கோபப்படும் ஸ்ரேயாவின் நடவடிக்கைகளால் விமல் பல்வேறு சிரமங்களை சந்திக்கிறார்.

இந்த நிலையில், ஸ்ரேயாவின் லண்டன் விசா காலாவதியாகிறது. விசாவை நீட்டிக்க அவர் இந்தியா சென்று அங்கிருந்து விண்ணப்பிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சி.இ.ஓ பதவியும் கைநழுவும் நிலை உருவாகிறது.

இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க ஒரு வழியை யோசிக்கும் ஸ்ரேயா, நிரந்தர லண்டன் குடியுரிமை பெற்ற விமலை திருமணம் செய்துகொண்டது போல் நாடகமாடி, அதன் மூலம் தனது குடியுரிமை பிரச்சனையை சரி செய்ய முடிவு செய்கிறார். ஆனால், ஸ்ரேயாவின் எதிராளியுடன் ரகசியமாக கைகோர்க்கும் விமல், திருமண நாடகத்தை பயன்படுத்தி அவரை ஏமாற்றுவதோடு, அவரது பதவி உயர்வையும் தடுக்க திட்டமிடுகிறார்.

ஸ்ரேயாவின் திட்டத்திற்கு விமல் சம்மதித்தாலும், அதற்கு ஒரு நிபந்தனை விதிக்கிறார். அதாவது, தன்னுடன் தமிழகத்திற்கு வந்து தனது பெற்றோரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. வேறு வழியில்லாமல் விமலின் நிபந்தனைக்கு சம்மதிக்கும் ஸ்ரேயா, அவருடன் தமிழகத்திற்கு வருகிறார். அதன் பிறகு இருவரது திட்டங்களும் எந்த திசையில் பயணிக்கின்றன, இறுதியில் யாருடைய திட்டம் வெற்றி பெறுகிறது என்பதுதான் ‘சண்டக்காரி’.

விமல், லண்டனில் இருந்தாலும் தமிழகத்தில் இருந்தாலும் அடிப்படையில் மாறாத அதே கதாபாத்திரத்திலேயே பயணிக்கிறார். ஆடை மற்றும் இருப்பிடம் மட்டுமே மாறியிருக்கிறதே தவிர, அவரது நடிப்பில் பெரிய மாற்றம் இல்லை. வழக்கமான தனது பாணியில் நடித்திருக்கும் விமல், கதைக்கு தேவையான அளவுக்கு தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

நாயகி ஸ்ரேயாவின் தோற்றத்தில் இருக்கும் கவர்ச்சி, அவரது நடிப்பில் முழுமையாக வெளிப்படவில்லை. எப்போதும் கோபமாக இருப்பது, தன்னைச் சுற்றியிருப்பவர்களை மதிக்காமல் அதிகார தோரணையில் நடந்து கொள்வது போன்ற குணாதிசயங்களுடன் உருவாக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு அவர் ஓரளவுக்கு பொருத்தமாக இருக்கிறார். கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை முடிந்தவரை சரியாக செய்திருக்கிறார்.

விமலின் தந்தையாக நடித்திருக்கும் பிரபு, தாயாக நடித்திருக்கும் உமா பத்மநாபன், ஸ்ரேயாவின் தோழியாக வரும் புன்னகை பூ கீதா, சத்யன், கே.ஆர்.விஜயா, ரேகா, தேவ் கில், கிரேன் மனோகர், மகாநதி சங்கர் உள்ளிட்ட அனைவரும் தங்களது அனுபவத்துக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். குறிப்பாக துணை கதாபாத்திரங்களில் அனுபவம் வாய்ந்த நடிகர்கள் இருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ், லண்டன் நகரத்தின் அழகையும், தமிழக கிராமத்தின் இயல்பான சூழலையும் ரசிக்கும்படி பதிவு செய்திருக்கிறார். பாடல் காட்சிகளிலும் வண்ணமயமான காட்சியமைப்பை கொடுத்து பார்வையாளர்களை ஈர்க்கிறார்.

அம்ரிஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் வகையில் அமைந்திருக்கின்றன. பின்னணி இசையும் காட்சிகளின் தன்மைக்கு ஏற்றவாறு பயணிக்கிறது.

படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், இயக்குநர் அமைத்துக் கொடுத்த காட்சிகளை வரிசைப்படி தொகுத்திருக்கிறார். ஆனால், திரைக்கதையின் வேகத்தை அதிகரித்து, சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில் படத்தொகுப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

படத்தை எழுதி இயக்கியிருக்கும் ஆர்.மாதேஷ், கோபமான குணம் கொண்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையில் காதல் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை மையமாக வைத்து கதை சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், ஸ்ரேயா – விமல் கூட்டணி திரையில் எதிர்பார்த்த அளவுக்கு எடுபடாதது போலவே, அவர்களுக்குள் உருவாகும் காதலையும் இயக்குநரால் பார்வையாளர்களிடம் அழுத்தமாக கடத்த முடியவில்லை.

இருப்பினும், லண்டன் மற்றும் தமிழக கிராமம் என இரண்டு வெவ்வேறு களங்களை பயன்படுத்தி காதல், காமெடி மற்றும் குடும்ப உணர்வுகளை கலந்து ஒரு கமர்ஷியல் படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர்.

படத்தில் சில லாஜிக் மீறல்களும் இருக்கின்றன. தமிழகத்தில் படித்துவிட்டு லண்டன் செல்லும் விமல், தனது குடும்பத்தின் மூலம் நிரந்தர லண்டன் குடியுரிமை பெற்றவராக இருக்கிறார். ஆனால், அவரது குடும்பம் தொடர்ந்து தமிழகத்திலேயே வசிக்கிறது. மறுபக்கம், லண்டனில் பல ஆண்டுகளாக மிகப்பெரிய நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும் ஸ்ரேயா இன்னும் நிரந்தர குடியுரிமை பெறாமல் இருப்பதாக காட்டப்படுகிறது. இந்த விஷயம் எப்படி சாத்தியம் என்பது புரியவில்லை.

இத்தகைய லாஜிக் குறைகளை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், காதல் மற்றும் காமெடியை மட்டும் எதிர்பார்த்து படத்தை அணுகினால் ‘சண்டக்காரி’ ஓரளவு ரசிக்க வைக்கும் கமர்ஷியல் படமாக பயணிக்கிறது.

Read Previous

கோல்டு கால் – விமர்சனம்

Read Next

மக்களுக்கு நன்றி சொன்ன ‘மண்டாடி’ குழுவினர்