ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – விமர்சனம்

ஹீரோயின் இல்லை….

பாடல்கள் இல்லை….

புகைப்பிடிக்கும் காட்சி இல்லை….

டாஸ் மாக் பார் காட்சி இல்லை…

அடுத்தவர் தோற்றத்தை கீழ்த்தரமாக கமென்ட் அடிக்கும் காமெடி இல்லை…

இதெல்லாம் இல்லாமல் 2013ல் ஒரு தமிழ் சினிமாவா…ஆம்..உண்மைதான்…இப்படித்தான் ஒரு வித்தியாசமான தமிழ்த் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.

எவ்வளவு நாளாயிற்று, இப்படி ஒரு படத்தைப் பார்த்து…மிஷ்கின் போன்ற ஒரு சில இயக்குனர்களால் தமிழ் சினிமா கண்டிப்பாக வளரும் என்ற நம்பிக்கை  வருகிறது.

கோடிகளில் கொட்டி உருவாக்கப்படும் அரங்குகளில் பாடல் காட்சிகள், அதில் ஹீரோயின்கள் அரை குறை ஆடையுடன் நடனமாடும் பாடல், இல்லையென்றால் வெளிநாட்டில் வீதிகளில் ஹீரோ, ஹீரோயின் நடனமாடும் பாடல், மற்ற மதத்தவரை வம்புக்கிழுக்கும் வகையிலான காட்சிகள் என தமிழ் சினிமாவை இன்னும் ‘அதிகமான’ மசாலாப் படங்களின் இருப்பிடமாக காட்டும் இயக்குனர்களே தயவு செய்து இந்த படத்தைப் பாருங்கள்.

தகர டப்பா போன்ற ஒரு படத்தை எடுத்து விட்டு, அதை தங்கம்..தங்கம் என மார்தட்டிக் கொள்ளும் சில இயக்குனர்களுக்கு மத்தியில் படத்தைப் பற்றி எதுவும் இதுவரை பேசாமலே நம்மைப் போன்றவர்களை எழுத வைத்தும், பேச வைத்தும் இருக்கிறாரே மிஷ்கின்…இவர்தான் உண்மையான படைப்பாளி.

படத்தின் கதையை விட அதை திரைக்கதையாக படைத்த விதத்தில் நம்மை அதிகம் கவர்கிறார்கள்.

‘பெயிட் கில்லர்’ ஆன மிஷ்கின் ஒரு நாள் இரவு குண்டடிபட்டு சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, அந்த வழியாக வரும் மருத்துவம் படிக்கும் மாணவரான ஸ்ரீ அவரை ஆஸ்பிட்டலில்ல் சேர்க்கப் பேராடுகிறார். ஆனால், எந்த ஆஸ்பிட்டலிலும் அவரை சேர்க்க முடியாமல் போக, வேறு வழியின்றி ஒரு உயிரைக் காப்பாற்ற மிஷ்கினை அவருடைய வீட்டுக்கு கொண்டு சென்று, ஆபரேஷன் செய்து அவரைக் காப்பாற்றுகிறார். ஆனால், இரவோடு இரவாக மிஷ்கின் அங்கிருந்து தப்பிக்கிறார்.

இதைக் கண்டுபிடிக்கும் காவல் துறை, ஸ்ரீயையும் அவருடைய அண்ணனையும் கைது செய்கிறது. மிஷ்கின் இதுவரை 14 கொலைகளை செய்தவர் என்றும், போலீஸ் என்கவுண்டரில் தப்பிய ஒருவனுக்கு அடைக்கலம் கொடுத்து, அவனைக் காப்பாற்றிய குற்றத்திற்காகவும் அவர்களை கைது செய்வதாக சொல்கிறார்கள். இதன் பின் போலீஸ் எதிர்பார்த்தபடியே ஸ்ரீயை தொடர்பு கொள்ளும் மிஷ்கின், அவரை சந்திக்க ஆசைப்படுகிறார்.

ஸ்ரீயை வைத்தே மிஷ்கினைப் பிடிக்கவோ, சுட்டுத் தள்ளவோ முடிவு செய்கிறது போலீஸ். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் பரபரப்பான மீதி கதை.

படத்தின் நாயகன் என்று மிஷ்கினையும், ஸ்ரீயையும் குறிப்பிட்டாலும் நமக்கென்னவோ இளையராஜாதான் படத்தின் நாயகன் என்று தோன்றுகிறது.

இப்படிப்பட்ட படங்களுக்கு பின்னணி…சாரி…மிஷ்கின் கூற்றுப்படி முன்னணி இசை கோர்ப்பு செய்திருக்கும் இளையராஜா…தான் இசையின் ராஜாதான் என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார்.

‘நந்தலாலா’ படத்திலேயே நல்ல நடிகராக் தோன்றிய மிஷ்கின் இந்த படத்தில் ‘உல்ஃப்’ ஆக ‘ஒன்டர்ஃபுல்லாக’ நடித்திருக்கிறார். அதிலும், ஒரு குடும்பத்தை அவர் ஏன் காப்பாற்றுகிறார் என்பதை ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’  கதையாகச் சொல்லும் அந்த  காட்சியில் அசத்தலான நடிப்பு.

‘வழக்கு எண் படத்தில் நடித்த ஸ்ரீ இந்த படத்தின் மற்றொரு நாயகன். எப்போதும் பதட்டத்திலேயே இருக்கும் ஒரு கதாபாத்திரம். அதை உணர்ந்து நடித்திருக்கிறார். இரண்டாவது படமே ஒரு புது நாயகனுக்கு நல்ல படமாக அமைவது பெரிய விஷயமே. அதை நன்றாகவே காப்பாற்றியிருக்கிறார்.

இவர்களைத் தவிர தெரிந்த முகங்கள் என்று பார்த்தால் குறைவுதான். பல புதுமுகங்களை நடிக்க வைத்திருக்கிறார் மிஷ்கின். அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களில் மிளிர்கிறார்கள்.

இரவு நேரங்களில் சென்னை இவ்வளவு அழகாகவா இருக்கிறது என ஆச்சரியப்பட வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜுனியர் ரங்கா. படம் முழுவதுமே இரவு நேரத்தில் நடப்பதால், லைட்டிங்கில் அவர் காட்டியிருக்கும் திறமை பாராட்டுக்குரியது.

பில்லா ஜெகன் அமைத்துள்ள கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி அசத்தல்.

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ – தமிழ் சினிமாவின் ‘ஆல் டைம் ஃபேவரிட்’.

மற்ற விவரங்கள்

தயாரிப்பு – ஜானஸ் பிக்சர்ஸ் – வெற்றிவேல் கிரியேஷன்ஸ் – லோன்ஃவுல்ஃப் புரொடக்ஷன்ஸ்

எழுத்து, இயக்கம் – மிஷ்கின்

இசை – இளையராஜா

ஒளிப்பதிவு – ஜுனியர் ரங்கா

எடிட்டிங் – கோபிநாத்

கலை – சதீஷ்

மிக்சிங் – தபாஸ்

சண்டைப் பயிற்சி – பில்லா ஜெகன்

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா

வெளியான தேதி – 27 செப்டம்பர் 2013

நடிப்பு – மிஷ்கின், ஸ்ரீ, ஆதித்யா மேனன், மோனா, சைதன்யா, ஷௌகத், ஷாஜி, ராம், ரவி வெங்கட்ராமன், ஸ்ரீராம், ஏஞ்சல் கிளாடி, கஜராஜ் மற்றும் பலர்.

Read Previous

ஜெய் நடிக்கும் ‘நவீன சரஸ்வதி சபதம்’

Read Next

இன்றைய ரிலீஸ்…