தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குப் பிறகு வந்திருக்கும் ஒரு மௌனப் படம். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் குறைவான பட்ஜெட்டில், குறைந்த கதாபாத்திரங்களுடன் ஒரு த்ரில்லர் படத்தைக் கொடுத்திருக்கிறார்.
‘மெர்க்குரி’ கம்பெனியின் கழிவுகளால் பாதிக்கப்பட்ட நான்கு நண்பர்கள், ஒரு நண்பி அவர்கள் படித்த பள்ளியின் விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கிறார்கள். காது கேட்காத, வாய் பேச முடியாத அவர்கள் தங்களது கொண்டாட்டத்தை குடித்துக் கொண்டாடுகிறார்கள். அப்படியே, காரில் ஏறி ஜாலியாக சுற்றக் கிளம்புகிறார்கள். அப்போது அவர்கள் காரில் வந்து சிக்கிக் கொண்டு எதிர்பாராமல் இறந்து போகிறார் பிரபுதேவா. அவருடைய உடலை ‘மெர்க்குரி’ கம்பெனி அருகில் புதைத்துவிட்டுப் போய் விடுகிறார்கள்.
நண்பர்களில் ஒருவனுக்குச் சொந்தமான ஐபாட்டை பிரபுதேவாவை புதைத்த இடத்தில் தவற விட்டுவிட்டு, அதை எடுக்க அந்த இடத்திற்குப் போகிறார்கள். ஐபாட் கிடைத்துவிட்டாலும் அங்கு பிரபுதேவாவின் பிணத்தைக் காணவில்லை. காரில் உட்கார வைத்து விட்டு வந்த தோழியும் காணாமல் போகிறார். பிரபுதேவாவும், அந்தத் தோழியும் ‘மெர்க்குரி’ கம்பெனிக்குள் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். தோழியை மீட்க நண்பர்கள் உள்ளே செல்கிறார்கள். பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
படத்தை எதற்கு மௌனப் படமாக எடுக்க வேண்டும் என்று கேட்பவர்களுக்கு படத்தில் ஒரு அழுத்தமான பதிவை வைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். ஆனால், அந்த ஒரே ஒரு காட்சியில் மட்டுமே அந்த அழுத்தம் இருப்பது குறையாக இருக்கிறது. வேறு எந்த சமயத்திலும் யாரும் பேசாமல் இருப்பது படத்திற்கு எந்த விதத்திலும் பயன்படவில்லை.
பிரபுதேவாவை படத்தின் நாயகன் என்று சொல்ல முடியாது, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று வேண்டுமானால் சொல்லலாம். அவருக்கிருக்கும் குறையே தெரியாமல் நண்பர்களை பழி வாங்குவது அசத்தல்.
நான்கு நண்பர்கள், ஒரு நண்பியாக சனந்த், தீபக் பரமேஷ், சஷான்க் புருஷோத்தமன், அனிஷ் பத்மநாபன், இந்துஜா. இவர்களில் இந்துஜாவிற்குத்தான் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. கிளைமாக்சில் பிரபுதேவாவுடன் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தவற்றை விவரிக்கும் காட்சியில் அவர் கண்களால் பேசி நடித்து கவர்கிறார்.
சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை விறுவிறுப்பைக் கூட்டுகிறது. பாடல்கள் இல்லை என்பது குறையாகத் தெரியவில்லை. திருநாவுக்கரசு ஒளிப்பதிவுதான் ‘மெர்க்குரி’யில் அதிகம் ஒளிரும் விஷயம். மலையின் அழகை இரவில் கூட ரசிக்கலாம் என தனித்தன்மையுடன் லைட்டிங் செய்திருக்கிறார்.
வழக்கமான பட வரிசையில் இல்லாமல் வித்தியாசமான பட வரிசையில் ‘மெர்க்குரி’யை தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம்.