கதை
சிறு வயதிலேயே பிரிந்து போன அண்ணன் தம்பி இரட்டையர்களாக இரு வேடங்களில் ஆர்யா. ஒருவர் சென்னைக்கு அருகில் கூலிக் கொலைகாரனாக இருக்கிறார். மற்றொருவர் ஈரோடு அருகில் ஒரு கிராமத்தில் பக்திமானாகவும், இயற்கை விவசாயியாகவும் இருக்கிறார். ஒரு கொலை வழக்கில் குற்றவாளியான கொலைகாரன் ஆர்யாவை போலீஸ் துரத்த, பக்திமான் ஆர்யா அவர்களிடம் தவறாக சிக்கிக் கொள்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
நடிப்பு
இரு வேடங்களில் ஆர்யா. இரண்டுமே ஒன்றுக்கொன்று எதிரான குணநலன் கொண்ட கதாபாத்திரங்கள். ‘நான் கடவுள்’ படத்திற்குப் பிறகு ஆர்யாவின் நடிப்புத் திறமை இந்தப் படத்தில்தான் மீண்டும் வெளிப்பட்டிருக்கிறது. ஆர்யாவின் முக்கியமான பட வரிசையில் இந்தப் படத்திற்கும் நிச்சயம் இடம் உண்டு.
கொலைகாரன் ஆர்யாவின் மனைவியாக இந்துஜா. காதலித்து மணந்து கொண்டவர். அன்பான மனைவியாக அவ்வளவு யதார்த்தமாக நடித்திருக்கிறார். பக்திமான் ஆர்யாவைக் காதலிக்கும் பெரியார் படத்தை தன் அறையில் வைத்திருக்கும் ஜர்னலிசம் படிக்கும் பெண்ணாக மகிமா நம்பியார். முற்போக்கு சிந்தனை கொண்டவர். இவரும் இதுவரை நடித்த படங்களிலிருந்து மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இசை, மற்றவை
ஜிப்ரான் பின்னணி இசை, அருண் பத்மாநாபன் ஒளிப்பதிவு இரண்டுமே படத்தின் தரத்தை இன்னும் உயர்த்துகின்றன.
+
அனைவரின் நடிப்பு…
–
கொஞ்சம் மெதுவாக நகரும் திரைக்கதை.