காதல் கண் கட்டுதே – விமர்சனம்

குறும் படங்களை இயக்கிய பலர் பெரிய திரையில் படங்களை இயக்க வந்து வெற்றி பெற்று கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட திறமைசாலிகளால் பல யதார்த்தமான, புதுமையான திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களுக்கம் கிடைத்து வருகின்றன.

திரைப்படம் என்பதே கதை சொல்லலில்தான் அடங்கியிருக்கிறது. அப்படி சொல்வதை யதார்த்தாமகவும், சுவாரசியமாகவும் சொல்லிவிட்டால் ரசிகர்களைக் கவர்ந்துவிடலாம்.

‘காதல் கண் கட்டுதே’ ஒரு எளிமையான யதார்த்தமான திரைப்படம். அதிகப்படியான செலவுகள் இல்லாமல் அழுத்தமான நடிப்பால் நம்மை ரசிக்க வைத்துள்ள படம்.

ஒரு பைக் ஷோரூமில் வேலை பார்க்கும் கே.ஜிக்கும், ஒரு பத்திரிகையில் வேலை பார்க்கும் அதுல்யாவும் நண்பர்களாகப் பழகி காதலர்கள் ஆகிறார்கள். அதுல்யா கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு மாற்றலாகிச் செல்கிறார். அங்கு அவருடன் வேலை பார்க்கும், அனிருத் அதுல்யாவைக் காதலிப்பதாகச் சொல்கிறார்.

ஒரு சந்தர்ப்பத்தில் அதுல்யா, அனிருத் இருவரும் பழகுவதைப் பார்த்த கே.ஜி அதுல்யா மீது கோபம் கொள்கிறார். இதனால், கே.ஜி, அதுல்யா காதலுக்கிடையே குழப்பம் உண்டாகிறது. இந்த குழப்பம் நீடிக்கிறதா, முடிவுக்கு வருகிறதா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கோவையிலிருந்து வந்த கார்த்திக் நரேன் ‘துருவங்கள் 16’ படத்தைக் கொடுத்து வியக்க வைத்ததைப் போல, அதே கோவையிலிருந்து வந்துள்ள இப்படத்தின் இயக்குனர் சிவராஜும் வியக்க வைத்துள்ளார்.

ஆனாலும், காதலர்கள் அடிக்கடி சந்திப்பதும், பேசிக் கொள்வதுமாக நகரும் திரைக்கதையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

இருந்தாலும் அதையும் மீறி, கே.ஜி-யும், அதுல்யாவும் தங்களது இயல்பான நடிப்பால் நம்மை கண் கொட்டாமல் பார்த்து ரசிக்க வைக்கிறார்கள். அதிலும் அதுல்யாவின் கண்களே ஆயிரம் அர்த்தங்களை எளிதாகச் சொல்லிவிடுகிறது.

ஒரு வேளை அதுல்யாவின் கண்களைப் பார்த்துத்தான் படத்தின் இயக்குனரே ‘காதல் கண் கட்டுதே’ என தலைப்பை வைத்திருக்கலாம் போலிருக்கிறது.

இப்படத்தில் உள்ள சிறுசிறு குறைகளை இப்படத்திற்கான விமர்சனங்களைப் படித்து சரி செய்து கொண்டால் சிவராஜும் தமிழ்த் திரையுலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கலாம்.

 

Read Previous

Pagadi Aattam Review & Rating

Read Next

நல்ல படம் எடுத்தால் ஓடும் – கே.பாக்யராஜ்